ARTICLE AD BOX
-தி. சிவசுப்பிரமணியன்
வாழ்க்கை என்பது சில சமயம் கியூ வரிசை மாதிரி ஆகிப்போகிறது. தன் வாழ்க்கையில் எல்லா விஷயமும் இது மாதிரிதான் நடந்தேறி இருப்பதாய்க் கார்த்தீசனுக்குத் தோன்றிற்று.
கார்த்தீசன் பிளஸ்-2 முடித்ததும், அப்பாதான் அவனை பி.எஸ்ஸி. ரசாயனம் படிக்கச் சொன்னார். ரசாயனத்துக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றார்.
ஆனால் கார்த்தீசனுக்கு ஏனோ ரசாயனம் பிடிக்காது போயிற்று. அதற்காக அவன் சரிவரப் படிக்காது இருக்கவில்லை. முதல் வகுப்பில் தேர்வாகி முடித்தான். வழக்கமான முன்மாதிரிகள்போல், தினசரிகள் பார்த்து வேலைக்கு மனுச் செய்யலானான்.
இந்தக் காலகட்டத்தில் 'இண்டர்வ்யூ' நிமித்தம் நிறைய இடங்கள் செல்ல முடிந்தது. பலதரப்பட்ட மனிதர்களை உணரமுடிந்தது.
ஆனால் யாவும் கொஞ்ச காலம்தான். 'சும்மா இருக்க வேண்டாமே' என்று அப்பாவுடன் விவசாயம் பார்க்கப் போகவேண்டி வந்தது. கிராமத்திலேயே வளர்ந்தவனாதலால், பெரிதாய்க் கஷ்டம் ஏதுமில்லை. வீட்டில் டிராக்டர் இருந்தது. அந்தச் சமயத்தில்தான் ஏதோ காரணங்களுக்காய் டிரைவர் நின்று போக, கார்த்தீசன் டிராக்டர் டிரைவர் ஆனான்.
அதன் பிறகு வாழ்க்கை ஒரு விசித்திரக் கோணத்தில் திரும்பிற்று. நேரங் காலம் பாராது உழைக்க வேண்டி இருந்தது. உழைத்த உழைப்புக்குப் பலன் இருந்தது. கையில் கொஞ்சம் காசு பார்க்க முடிந்தது.
உழைப்பும், அதற்கேற்ற பலனும், ஓரளவு காசும் வாழ்க்கையை நிறைவாக்கிற்று. அந்தச் சமயம், வீடு அவனுக்காய் பெண் பார்க்க ஆரம்பித்தது. இதில் ஒரு சிக்கல் வந்து சேர்ந்தது. கார்த்தீசன் படித்த பெண்ணையே மணம் செய்ய விரும்பினான்.
ஆனால் படித்த பெண்ணின் வீட்டார் விவசாயி மாப்பிள்ளைக்குப் பெண் தரச் சம்மதிக்கவில்லை.
"வெவசாயம்லாம் இப்ப சரிப்பட்டு வராதுங்க. ஒரு காலம் முப்போகம் விளைஞ்சது. இப்போ அப்படியா? காசு வர்ற மாதிரி வரும். சட்டுனு கவுத்திரும். பையன் படிச்சிருக்கான். ஏதோ உத்யோகத்துல இருந்தான்னா, நம்பிப் பொண்ணு தரலாம். கோவிச்சுக்கப்படாது. பெண்ணைப் பெத்தவன் நிலைல இருந்து பார்த்தா உங்களுக்கே புரியும்."
எல்லாரும் தவறாது இதையே சொன்னார்கள். அரசு உத்யோகம் இல்லாவிடினும்கூட பரவாயில்லை. தனியார் வேலை செய்தாலும் சரிதான். ஆனால், விவசாயம் என்பது சரிப்படாத விஷயம் என்றார்கள்.
கல்யாணம் தட்டிப்போயிற்று.
இந்தக் குளறுபடியில் வேறு பல சிக்கல்கள் முளைத்தன. 'டிராக்டர் வருமானம்' முழுக்க செலவு செய்ததில், பாங்கில் கட்ட வேண்டிய தவணை கட்ட இயலாது போயிற்று. கடன் நெருக்க ஆரம்பித்தது. வண்டியில் ரிப்பேர், அது இது என நிறைய செலவுகள் வந்தது. தவிரவும் அந்த முறை வாழை போட்டதில், காற்று வீசி எல்லாம் சாய்ந்து விட பெருநஷ்டமாகிப் போயிற்று. வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும் என்பதை உண்மையாக்கிற்று.
பேசாமல் வண்டியை விற்றுக் கடனை அடைக்கலாம் என்று வீடு தீர்மானித்தது. வேதனையுடன் கார்த்தீசன் அதற்குச் சம்மதம் தர வேண்டியதாயிற்று. வண்டி விற்றுக் கிடைத்த காசில் கடன் அடைத்து, மீதிக் காசுடன் கார்த்தீசன் உத்தியோகம் தேடி சென்னைக்குப் போக வேண்டியதாயிற்று.
சென்னை என்கிற பெருநகரத்தில் எளிதாய் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் சம்பளம் சொற்பம். "பொறுமையாய் இருப்பின் நாலைந்து வருடங்களில் வேலை நிரந்தரமாகி ஓரளவு காசு கையில் வரும் என்று சொல்லப்பட்டது. வாஸ்தவம்தான். இருபத்தி இரண்டு வயதில் அவ்விதம் வந்திருப்பின், இருபத்து ஏழு வயதில் ஒரு 'நிலைக்கு' வந்துவிட முடியும். ஆனால், வேலைக்குச் சேரும்போதே வயது இருபத்து ஏழு முடிந்து விட்டது கார்த்தீசனுக்கு. வாழ்க்கையில் ஒரு 'பொசிஷனுக்கு' வர முப்பத்திரண்டு வயதுக்குமேல் ஆகிவிடும். அதன் பிறகு திருமணம் செய்து, குழந்தைகள் பெற்று...
கார்த்தீசன் கவலை அதிகமாயிற்று. 'வேறு வழியில்லை, இதுதான் விதி' என்று ஏற்றுக்கொள்ள வேண்டி வந்தது. ஆயினும் வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்புமான விஷயம். வாழ்வில் முன்னேற, சந்தர்ப்பம் மறுபடி ஒருமுறை கதவு தட்டியது, கார்த்தீசனின் அக்காள் கணவன் வழியில்.
கார்த்தீசனின் அக்காள் கணவன் மத்திய ரிசர்வ் போலீசில், ஏ.எஸ்.ஐயாக இருக்கிறார். அதன் சென்னை குவார்ட்டர்சுக்குள் 'ஒரு காய்கறிக்கடை' வைக்க வாய்ப்பு வந்தது. வேலை பார்ப்பவரின் 'சிபாரிசு' இருந்தால் வாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. அதற்கு அதிக முதலீடு தேவையில்லை. பத்தாயிரம் ரூபாய் இருந்தால் போதும். கடை துவங்கி விடலாம். மிக எளிதானது அது. தொழில் போட்டி கிடையாது. நிச்சயம் வியாபாரம் ஆகும். முனைந்து செயல்பட, முன்னேறிவிடலாம். கார்த்திசனுக்கு மறுபடி நம்பிக்கை துளிர்த்தது.
''படிச்சவன் காய்கறிக் கடை வைக்கலாமா?" உறவு ஜனம் கேட்டது.
"வேறென்ன செய்றது?"
"பார்த்துட்டுத்தான் இருக்கேன். ஆனா, படிப்புக்கேத்த வேலை இல்லியே. முன்னேற வாய்ப்பு இல்லையே."
"அதுக்காக நம்பிக்கை இழந்துடறதா? உன் பயோடேட்டா கொடு. எனக்குத் தெரிஞ்ச இடத்துல முயற்சி பண்றேன். கண்டிப்பா வேலை கிடைக்கும்."
"எப்போ? நாப்பது வயசுக்கு மேலயா?"
"இதான். இந்த வாய்க்கொழுப்புதான் உன்னை முன்னேற விடலை. போ, போயி காய்கறி வியாபாரம் பண்ணு. கஷ்டப்படு. எனக்கென்ன வந்துது. நல்லதைச் சொன்னா இதான் கதி."
உறவு சீறிற்று. இது இவ்விதம் என்றால் கார்த்தீசன் வீடும் எதிர்ப்புக் காட்டிற்று. "அதெல்லாம் கடையும் வேணாம். ஒண்ணும் வேணாம். பேசாம உத்தியோகம் பார்க்கச் சொல்லு. இதுலயே இருந்தா 'பெர்மனன்ட்' ஆயிரலாமாம். விசாரிச்சதில் சொன்னாங்க. பேசாம வேலையப் பாரு. அப்புறம், வேலை பார்க்கிற பொண்ணாப் பாத்துக் கல்யாணம் முடிச்சி வச்சிட்டா, ரெண்டு பேரும் சேர்ந்து சமாளிச்சிக்குவீங்க!" உபதேசம் வழங்கப்பட்டது.
கார்த்தீசனுக்கு விழிப்புத் தட்டியபோது மணி ஆறே முக்கால். பத்து மணிக்குத்தான் ஆபீஸ். இன்னும் முழுதாய் மூன்றே கால் மணி நேரம் இருக்கிறது. சோம்பலாய்க் கொஞ்ச நேரம் படுக்கையில் புரண்டு, பிறகு எழுந்து குளித்து வேலைக்குக் கிளம்பினான்.
பத்து மணிக்கு ஆபீஸ் சென்று கையெழுத்திட்டு, வேலை பார்க்க ஆரம்பித்த அரைமணியில் நீளமாய்க் கொட்டாவி விட்டான். "சாயங்காலம் ஒரு இடத்துக்குப் பெண் பார்க்கச் செல்ல வேண்டி இருக்கிறது. பெண் உத்யோகம் பார்க்கிறதாம். டீச்சர் வேலை. மாசம் எவ்வளவு வரும்? என் சம்பளமும், அவள் சம்பளமும் சேர்த்து எப்படிக் குடித்தனம் நடத்தலாம்?" கணக்குப் போடத் தொடங்கினான். அவ்விதம் கணக்குப் போடும்போதே “அந்தப் பெண் எப்படி இருக்கும்?"- கனவு காணத்துவங்கினான் கார்த்தீசன்.
பின்குறிப்பு:-
கல்கி 15.09.1996 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகியிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே!
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்