ARTICLE AD BOX
கீழப்பெருமழை ஓர் அழகிய கிராமம்! சுமார் 300 குடும்பங்கள் வாழும் குதூகலமான ஊர். வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு என்று நான்கு திசைகளின் பேரிலும் தெருக்கள். நடு நாயகமாக, உயர்ந்த இடத்தில் சிவன் கோயில்.
கோயிலுக்கு எதிரே திருக்குளம். சிவன் கோயிலுக்குப் பின்னால் தருமர் கோயில். பிடாரி குளக்கரையில் பிடாரி கோயில். தாமரைக் குளத்தருகில் அன்ன மடம். தரும கோயில் பக்கத்தில் ஐயங்குளம். பிடாரி குளமும், தாமரைக் குளமும் பெரும் குளங்கள். தெருவுக்கு ஒரு குளம். குட்டை. என்று நீருக்குப் பஞ்சமில்லாத காலமது!
வடக்குத் தெருவில் பெரும் தனக்காரர் ஒருவரும், தெற்குத் தெருவில் ஒருவரும் இருந்தார்கள். 'வடக்குப் பண்ணை!', 'தெற்குப் பண்ணை!' என்றே அழைக்கப்பட்டார்கள். ஊரின் நல்லது, கெட்டதெல்லாவற்றையும் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
அவர்களின் நல்லது கெட்டதையும் பார்த்துக் கொள்ள மேற்கில் ஐயனாரும், தெற்கில் முனியரும் காவல் தெய்வங்களாக வீற்றிருந்தார்கள்.
மரைக்காக் கோரையாற்றுப் பாசனம் ஊரைச் செழிக்க வைத்துக் கொண்டிருந்தது. ஊரைச் சுற்றிலும் விளை நிலங்கள்தான். ஆற்றில் நீர் வந்து விட்டால், ஊரே சுறு சுறுப்பாகி விடும். எல்லா வயல்களிலும் நீர் இருக்கும்போது, பௌர்ணமி நிலவு காயும் இரவில், வயல்களைப் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும். சில நாட்களில் நடவு செய்து விட்டால், பச்சைப் பட்டாடையை விரித்தது போல், சூரியக் கதிர்களில் பயிர்கள் மின்னும்! கதிர்கள் முற்றி கவிழ்ந்து நிற்கையில், அக்கால மணப்பெண்கள் நாணத்தில் தலை கவிழ்ந்ததை ஞாபகப் படுத்தும். அறுவடை ஆனதும், உளுந்து, பயறு என்று தெளித்து, மேலும் வருமானத்தைப் பார்ப்பர் ஊரார்.
பொங்கல் திருநாளை மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து கொண்டாடி அசத்துவார்கள். அதிலும், இரண்டாம் நாள் கொண்டாடும் மாட்டுப் பொங்கல் இருக்கிறதே அதனை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுவார்கள்.
மாட்டுக்குக் கழுத்தில் போட நெட்டி மாலை. மேலும், பனை ஓலையில் தாமரை மொட்டு மாலை! நெற்றிக்குப் பனை ஓலையில் பின்னப்பட்ட நெற்றிச் சுட்டி!கொம்புகளிலோ, பொன்னிறக் கருக்காயில் பின்னப்பட்ட செண்டு! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில்... மாடுகளைத் தெய்வமாகவே பாவித்த காலமது!
உழவில் தொடங்கி, விளைச்சல் வீடு வரும் வரை மாடுகளின் பங்கு அளவிடற்கரியது. கோயில் திருவிழாக்கள் நேரத்தில், ஊரே விழாக் கோலம் பூண்டு விடும். சொந்த பந்தங்களெல்லாம் வந்து டேரா போட்டு விடுவார்கள். நிலங்கள் வஞ்சனயின்றி விளைந்ததால், பொருளாதாரத்திற்குக் குறைவில்லாத நேரம்.
அந்தக் கோடையில், உழவு மாடுகள் திருட்டு திடீரென அதிகரித்துவிட்டது! கட்டுத் தறியில் கட்டியிருந்த மாடுகள் இரவோடிரவாக மாயமாக மறைந்தன!
'கோமவரத்தான் வேலையிது!' என்று பெரியவர்கள் சொன்னார்கள். இளைஞர்கள், கட்டுத்தறியிலேயே கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்தாலும், அவர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு மாடுகள் மாயமாகின. ஜோடி, ஜோடியாக நல்ல மாடுகள் காணாமல் போக, ஊரார் செய்வதறியாது திகைத்தார்கள். ஊர்ப் பெரியவர்கள் கூடி, நான்கைந்து முறை பேசியும் உருப்படியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. தாங்கள் உயிருக்குயிராய் மதித்த மாடுகள் காணாமல் போன வருத்தத்தில் பல வீடுகளில் உலை வைக்கவேயில்லை.
இறுதியாகத்தான் அந்த முடிவுக்கு வந்தார்கள். சரியான முடிவென்று ஊராரும் ஒத்துக் கொண்டார்கள். முடிவு இதுதான். 'சாயந்திரமே அனைவரும் ஐயனார் கோயில் மைதானத்தில் முளையடித்து மாடுகளைக் கட்டி விட்டு, பாரத்தைச் சாமி மீது போட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பி விட வேண்டும். மீண்டும் காலையில் சென்று பார்த்துக் கொள்ளலாம்.'
ஆற்றங்கரைப் படுகையைத் தாண்டித்தான் ஐயனார்கோயில். ஊரிலிருந்து 2 கி.மீ தூரம் தாண்டி. கோயில் என்று பேர்தானே தவிர, வயல்களுக்கு நடுவே சற்றே உயரமான இடத்தில், இரண்டே இரண்டு மரங்கள். நிறைய காலியிடம். அந்த மர வகை, அந்தப்பகுதியில் வேறெங்கும் இல்லாதது. அந்த மரங்கள் மட்டும் சற்று உயரத்தில்.
கோயிலுக்கென்று ஒரு நல்ல பாம்பு. வெள்ளிக் கிழமைகளில், அந்தப் பக்கம் செல்பவர்கள் அதனைப் பார்க்கலாம். கண்ணில்பட்ட அடுத்தநொடியே மாயமாய் மறைந்து விடும்!
வெள்ளிக் கிழமைகளில் பூஜை செய்ய, உள்ளூர்க்காரர் ஒருவர். எந்த வயதுப் பெண்களுக்குமே கோயில் வர அனுமதியில்லை. ஆண்களுக்கு மட்டுமே என்ட்ரி.
ஊர வைத்த பச்சரிசியில், வெல்லம், தேங்காய் சேர்ந்ததே, கோயிலின் பிரசாதம். எல்லாமே பச்சையாகத்தான். எனவே, அந்தப் பூஜைக்குப் பெயரே "பச்சை" என்கிறார்கள். அதையும் பெண்கள் தொடக்கூடாது!
அந்தந்தச் சமயங்களில் கிடைக்கும் பழங்களும் பிரசாதமாகும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளே, பெரும்பாலும். வெள்ளிக்கிழமை மாலை தணல் வளர்த்து, சாம்பிராணிப் புகை ஆராதனை காட்டும்போது சாம்பிராணி மணம் அந்த ஏரியாவையே மணக்கச்செய்யும்.
ஊரை விட்டுத் தூரத்தில் கோயில் இருப்பதால், மூலவர், உற்சவர் போல, பிடாரி குள மேற் கரையில், ஈச்ச மரத்தில் ஐயன் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமை மாலைகளில் இங்கு 5, 7, 9 என்று ஒற்றைப்படை எண்ணில் தேங்காய் உடைத்து, சாம்பிராணி ஆராதனை காட்டும்போது, ஏற்றுக்கொண்டதாகப் பல்லி சத்தமிடும். அச்சத்தத்திற்குப் பிறகே, தேங்காய் உடைத்தவர்கள் கலைந்து செல்வார்கள்.
இது இன்றைக்கும் தொடர்கிறது!
பெரியவர்கள் சொன்னவாறு, மாலையே ஊரார்கள் தங்கள் மாடுகளை ஐயனார் கோயில் மைதானத்தில் முளையடித்துக் கட்டிவிட்டு, ஐயனை வேண்டிக்கொண்டு, பொழுது சாயும் முன்னரே வீடு திரும்பி விட்டனர். எப்பொழுது விடியப் போகிறது? என்ன நடக்கப் போகிறது? என்ற எண்ண ஓட்டத்தில் பலரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அன்றைய இரவு மட்டும் நீண்டு கொண்டே போவதாக அவர்களுக்கு ஓர் உணர்வு!
ஒரு வழியாகப் பொழுதும் புலர்ந்தது. எல்லோரும் ஓடி வந்தார்கள் கோயில் மைதானத்துக்கு. என்ன ஆச்சரியம்?! அவர்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. அத்தனை மாடுகளும் அசை போட்டபடி படுத்திருந்தன. நான்கு வயலுக்கப்பால், திருடர்களில் இருவர் கீழே விழுந்து கிடந்தனர். கண்கள் தெரியவில்லை என்று கதறினர். மாடுகளுக்கு இடையே, மாட்டை அவிழ்க்கும் போதே பார்வை போய் விட்டதாகப் புலம்பியபடி மூன்றாமவர் பதறினார். மூவரும் மன்னிப்பு வேண்டி ஊரார் கால்களில் விழுந்தனர்.
அந்த வார வெள்ளிக்கிழமை, ஐயனுக்குச் சிறப்புப் பூஜை செய்யப் பட்டது! இது நடந்து பல வருடங்கள் ஆகி விட்டாலும், இன்றுவரை ஊரின் காவல் தெய்வமாக அவரே விளங்கி வருகிறார். கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளில், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்துவிட்டு வந்தாலும், திருட்டுப் போவதில்லை. மீறித் திருடுபவர்கள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். வாரப் பச்சையும், திங்கள், வெள்ளிகளில் தேங்காய் உடைத்தலும் இன்று வரை தொடர்கிறது!
ஐயனின் கருணையும் தொடர்கிறது!