சிதம்பரம் நடராஜருக்கு 12-ந்தேதி மகா அபிஷேகம்

10 hours ago
ARTICLE AD BOX

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மார்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரியஉதயத்திற்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன்பு உள்ள கனகசபையில் வருகிற 12-ந்தேதி( புதன்கிழமை) மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிர், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.

முன்னதாக 12-ந் தேதி காலை 9 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜ மூர்த்திக்கு லட்சார்ச்சனையும், காலை 10 மணிக்கு மகா ருத்ர ஜப பாராயணமும், மதியம் 2 மணிக்கு மகா ருத்ர யாகம், வஸோர்தாரை மற்றும் சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, மகா பூர்ணாகுதி தீபாராதனையும், பினனர் மாலை 6 மணிக்கு மேல் கனகசபையில் மகா ருத்ர ஜப மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மகா அபிஷேக ஏற்பாடுகளை கோவில் செயலாளர் உ.வெங்கடேச தீட்சிதர் மற்றும் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.


Read Entire Article