ARTICLE AD BOX
தனுஷின் நடிப்பில் குபேரா, இட்லி கடை ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் கடந்த மாதம் வெளியான நிலையில், இந்த படம் ஓ.டி.டி-யில் எப்போது ரிலீஸ் ஆகிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நடிகர் தனுஷ். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட்டிலும் தடம் பதித்தவர். தனுஷ் நடிப்பதோடு மட்டுமில்லாமல், இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பது என சினிமாவின் மற்ற துறைகளிலும் செயல்பட்டு வருகிறார்.
தனுஷ் நடிப்பில் அவருடைய 50வது படமான ராயன் திரைப்படம் அவரே இயக்கியிருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஒரு தரப்பினர் ட்ரோல் செய்தார்கள்.
இந்நிலையில், தனுஷ் இப்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படம் நன்றாக வந்திருப்பதாக இயக்குநர் தெரிவித்திருக்கிறார். இதை அடுத்து, இட்லி கடை என்ற படத்தை தனுஷ் இயக்கி நடிக்கிறார். இதில் நித்யா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார். அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையேதான், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின் சகோதரி மகனான பவிஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அனிகா சுரேந்திரன், சரண்யா, மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியான, இந்த படம் திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அந்த நேரத்தில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருந்த டிராகன் திரைப்படம் வெளியானது. இதில், நிலவுக்கு என் மேல் படம் ரசிகர்களை ஈர்த்து பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றிபெறத் தவறிவிட்டது.
இந்த படம் வசூலைக் குவிக்கத் தவறினாலும், பலரும் தனுஷின் இயக்கத்தை பாராட்டி வருகின்றனர். இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்த தனுஷுக்கு படம் பாக்ஸ் ஆஃபீஸில் வெற்றி பெறாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இருப்பினும், தனுஷ் இயக்கிய நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன்தான் உள்ளனர். இந்த சூழலில்தான், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் மார்ச் 21-ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.