சாலையில் தனியாக நடந்து சென்ற மாணவியிடம் சில்மிஷம்: வாலிபர் கைது

3 days ago
ARTICLE AD BOX

கோவை,

கோவையை சேர்ந்த 21 வயது மாணவி, தனது வீட்டின் அருகே உள்ள அழகுகலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். அவர், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் பயிற்சி முடிந்ததும் தனது வீட்டை நோக்கி தனியாக நடந்து சென்றார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து வந்தார். அந்த நபர் திடீரென்று மாணவியின் மீது மோதுவது போன்று சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, சாலையை விட்டு இறங்கி ஓரமாக நடந்து சென்றார்.

இதையடுத்து அந்த வாலிபர், மாணவியின் அருகே வந்து பேச முயன்றார். ஆனால் மாணவி பேசவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர், மாணவியை தொட்டு சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

இது குறித்து அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை அடையாளம் கண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நெல்லையை சேர்ந்த சரத்குமார் (வயது 32) என்பதும், கோவை அருகே பூசாரிபாளையத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது. உடனே போலீசார் சரத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Read Entire Article