ARTICLE AD BOX
ஸ்ரீபெரும்புதூர்: வெங்காடு ஊராட்சியில் சாலை விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வெங்காடு ஊராட்சியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அதேபோல, 100க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகளும் இயங்கி வருகிறது.
குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் இருந்து வெங்காடு கிராமத்துக்கு செல்ல சாலை உள்ளது. இந்த, சாலையை விரிவாக்கம் செய்ய, சாலையோரம் உள்ள 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு அதிகாரிகள், நோட்டீஸ் கொடுத்து அண்மையில் அளவீடு செய்துள்ளனர். இதனால், பல ஆண்டுகளாக வசித்து வரும் குடியிருப்பவாசிகள் அதிருப்தி அடைந்தனர். இதைத்தொடர்ந்து, சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் நேற்று வெங்காடு – சோமங்கலம் சாலையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார், போலீசார், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதாக கூறி சமாதானம் செய்தனர். இதனையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், சுமார் 2 மணி நேரம் வெங்காடு கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
The post சாலை விரிவாக்கத்திற்காக குடியிருப்புகள் அகற்றம் கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.