ARTICLE AD BOX
இரண்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டுவந்திருக்கும் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, பும்ரா இல்லாத சூழலில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலை வழிநடத்துகிறார்.
இந்த சூழலில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது இந்திய அணி. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வுசெய்த நிலையில், முகமது ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவிற்கு சிறந்த தொடக்கத்தை அமைத்து கொடுத்தார்.
சக்லைன் முஷ்டாக் சாதனை முறியடிப்பு..
3வது விக்கெட்டாக 68 ரன்கள் அடித்து நிலைத்து நின்று ஆடிய ஜேக்கர் அலியை வெளியேற்றிய முகமது ஷமி, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய 200வது விக்கெட்டை பதிவுசெய்தார்.
இந்த மைல்கல்லை எட்டிய முகமது ஷமி குறைவான பந்துகளில் 200 ஒருநாள் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரராக மாறி, ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் சக்லைன் முஸ்டாக்கின் சாதனையை முறியடித்தார். இந்த சாதனையை 5126 பந்துகளில் படைத்து முதலிடம் பிடித்துள்ளார் முகமது ஷமி.
இருப்பினும் இன்னிங்ஸ்கள் அடிப்படையில் 101 இன்னிங்ஸில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் சக்லைன் முஸ்டாக் முதலிடத்தில் நீடிக்கிறார். முகமது ஷமி 103 இன்னிங்ஸ்களில் 200 விக்கெட்டை வீழ்த்தி சாதனை பட்டியலில் முதல் இந்திய பவுலராக இடம்பெற்றுள்ளார்.