ARTICLE AD BOX
8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரின் லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகளின் முடிவில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து, துபாயில் கடந்த 09 ஆம் தேதி இரவு அரங்கேறிய இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மிகவு பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 63 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து, 252 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை 2-வது முறையாக சொந்தமாக்கியது. அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய அணியை பல தரப்பினரும் பாராட்டினர். அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
அதன்படி, இந்திய அணிக்கு ரூ.58 கோடியை பரிசுத்தொகையாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இது இந்த தொடரில் இடம்பெற்றிருந்த வீரர்கள்,பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்களை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்டுள்ளது.