ARTICLE AD BOX
சென்னை,
அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் இருந்து இதர இடங்களுக்கு வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் இருந்து பயணிப்பார்கள். அதே போன்று பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணிப்பார்கள்.
இதனை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 21-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை 270 பஸ்களும், 22-ந் தேதி (நாளை) சனிக்கிழமை 275 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 21-ந் தேதி வெள்ளிக்கிழமை மற்றும் 22-ந் தேதி சனிக்கிழமை தலா 51 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்தில் இருந்து 21 மற்றும் 22-ந் தேதிகளில் தலா 20 பஸ்களும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.