சாம்பியன்ஸ் டிராபி: ஆட்ட நாயகன் ரோகித் சர்மா, தொடர் நாயகன் ரச்சின் ரவீந்திரா

7 hours ago
ARTICLE AD BOX

துபாய்,

8 அணிகள் பங்கேற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு துபாயில் நடந்தது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. இதனால், 252 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ரோகித் சர்மா 76 ரன்கள் சேர்த்து அணி வெற்றி பெற உதவினார். கில் 31 ரன்களில் வெளியேறினார். ஸ்ரேயாஸ் 48 ரன்களிலும், அக்சர் படேல் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் கே.எல். ராகுல் 34 ரன்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார். 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்த இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் கோப்பையை தட்டி சென்றது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டார். அவர் கூறும்போது, தொடர் முழுவதும் உண்மையில் நாங்கள் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடினோம்.

நாங்கள் விளையாடிய விதம் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் ஏதேனும் வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சிக்கும்போது, அணியின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவை. அணியினர் என்னுடன் இருந்தனர். நான் மனதளவில் தெளிவாக இருந்தேன் என்பதே முக்கியம் வாய்ந்த விசயம் என கூறினார்.

தொடர் நாயகன் விருது பெற்ற ரச்சின் ரவீந்திரா கூறும்போது, நிச்சயம் இது கசப்பு கலந்த இனிப்பாக உள்ளது. நாங்கள் சிறந்த முறையிலான கிரிக்கெட்டை விளையாடினோம். இந்திய அணிக்கு வாழ்த்துகள் என கூறினார்.


Read Entire Article