இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு… திமுக போட்ட 3 முக்கிய தீர்மானம்…!

6 hours ago
ARTICLE AD BOX

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கவுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தலைமையில், நேற்று சென்னை, அண்ணா அறிவாலயம், கழக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது இந்த கூட்டத்தில் தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கும் விதமாக ஒன்றிய அரசு திட்டமிட்டிருக்கும் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

முதல் தீர்மானம்

தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்கின்ற ஜனநாயகப் போராளியாகத் திகழ்கின்ற கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில் இந்திய நாடாளுமன்றத்தில் கழக எம்.பி.க்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என உறுதியளிப்பதுடன், தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் தொடர்ந்து பாரபட்சம் காட்டி வருவதுடன், தமிழ்நாடு பல துறைகளிலும் அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ள இருமொழிக் கொள்கைக்கு எதிரான இந்தித் திணிப்பு முயற்சியையும் மேற்கொண்டு தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, மக்கள் தொகை அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் தொகுதி மறுசீரமைப்பிலும் தெளிவான பதிலைத் தராமல் குழப்பி வருகிறது.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு முதலிய தென்னிந்திய மாநிலங்களைப் பழி வாங்குகிற வகையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வின் சதித் திட்டத்தைத் தெளிவாக உணர்ந்து, இப்பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் கழகத் தலைவர் முதலமைச்சர் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையாகத் துணை நிற்பதுடன் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினைகளை முன்வைத்துப் போராடி, தமிழ்நாட்டிற்குரிய நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்று கூட குறையாத வகையிலும், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிற்குரிய தொகுதிகளின் விகிதாசாரத்தைத் தக்க வைப்பதிலும் வெற்றியை ஈட்டுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இரண்டாம் தீர்மானம்

தொகுதி மறுசீரமைப்பின் விளைவுகள் தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதிக்கும் என்பதால் அந்த உரிமையைக் காக்கும் அறவழி முயற்சிகளில் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வகையில், 50க்கும் மேற்பட்ட அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் நியாயம் பெறுவதற்கான இயக்கத்தை முன்னெடுத்திருக்கும் முதலமைச்சர் அவர்களுக்கு ஆதரவாக நின்று, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதால் மக்களவைத் தொகுதிகளை இழக்க நேரிடும் அபாயத்தில் உள்ள ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் என பாதிக்கப்படவிருக்கும் 7 மாநிலங்களைச் சார்ந்த கட்சிகளையும் ஒருங்கிணைத்துப் போராட்டக் களத்திற்கு அழைத்து வரும் பொறுப்பைக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மேற்கொள்வர் என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மூன்றாவது தீர்மானம்

நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கையின் இரண்டாவது கட்டக் கூட்டத்தொடர் மார்ச் 10-ஆம் நாள் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழமைக் கட்சி உறுப்பினர்கள், இந்தியா கூட்டணி உறுப்பினர்கள் மட்டுமின்றி ஜனநாயகத்தைக் காப்பதில் உறுதியாக உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துள்ள தொகுதி மறுசீரமைப்பில் மாநிலங்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் நாடாளுமன்றத்தில் இதனைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து பாதிப்படையவுள்ள மாநிலங்களுடைய தொகுதிகளின் எண்ணிக்கையையும் அதன் விகிதாசாரத்தையும் காப்பாற்றுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

The post இன்று தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 2-வது அமர்வு… திமுக போட்ட 3 முக்கிய தீர்மானம்…! appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.

Read Entire Article