ARTICLE AD BOX
பெண்களே… நீங்க பொக்கிஷமா பாதுகாத்து வரும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் கறையேற்பட்டு விட்டதே என்று கவலைப்பட வேண்டாம். இத்தனை அழகான பாரம்பரியம் மிக்க பட்டாடை பொலிவிழந்து மதிப்பில்லாமல் போய்விட்டதே என்றும் எண்ண வேண்டாம். கறை நீங்க, நீங்களே செய்யக்கூடிய 4 வித எளிய வழி முறைகளை இப்பதிவில் பார்க்கலாம் வாங்க.
1.புடவையில் எண்ணெய் பட்டுவிட்டதா? பதற்றமடைய வேண்டாம். தாமதம் செய்யாமல் ஒரு சுத்தமான, உலர்ந்த காட்டன் துணி அல்லது பேப்பர் டவல் கொண்டு வந்து எண்ணெய் பட்ட இடத்தில் கவனமாக ஒற்றி எடுக்கவும். மிகுந்த பொறுமையுடன், கறைபட்ட இடத்தை அழுத்தித் தேய்க்காமலும், மற்ற இடங்களுக்குப் பரவுவதைத் தடுக்கும் விதத்தில் மெதுவாகவும் ஒற்றி எடுத்தால், முடிந்த அளவு கறையை நீக்கலாம். கறையின் அளவு சிறியதாகி, தேடும் அளவுக்கு குறைந்துவிடும்.
2.மற்றொரு விதமாக, கறைபட்ட இடத்தில், உறிஞ்சும் தன்மை கொண்ட பேக்கிங் சோடா, டால்கம் பவுடர், கார்ன் ஸ்டார்ச் போன்றவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, கறை மீது அப்பவுடரை தாராளமாகத் தூவவும். பின் சுமார் பத்து மணி நேரம் அப்படியே விட்டு விடவும். அந்த இடைவெளியில் கறை பட்ட இடத்து அழுக்குகளை பவுடரானது கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சி எடுத்துவிடும். பின் ஒரு மென்மையான பிரஷ் அல்லது துணியின் உதவியால் பவுடரை நீக்கிவிடவும்.
3. பவுடர் தூவி சுத்தப்படுத்திய பின், கறைபட்ட இடத்தை குழாயடியில் காட்டி குளிர்ந்த நீரால் அலசி விடுவது முக்கியம். இப்படி செய்வதால் மீதமுள்ள எண்ணெய் மற்றும் அழுக்குகள் யாவும் நீங்கிவிடும். ஆனால், சூடான நீரில் அலசினால் கறை நிரந்தரமாகத் தங்கி நீக்க முடியாததாகிவிடும். எனவே குளிர்ந்த நீரை உபயோகிப்பது மிக முக்கியம்.
4. சோப் கரைசல் கொண்டு கரையை நீக்குவது இன்னொரு முறையாகும். இதற்கு மிருதுத் தன்மை கொண்ட லிக்விட் சோப் சிறிது எடுத்து தேவையான அளவு குளிர்ந்த தண்ணீரில் கரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு சுத்தமான காட்டன் துணியை அக்கரைசலில் நனைத்து கறை மீது மெதுவாக துடைக்கவும். துணியின் இழைகள் அறுந்துவிடும் அபாயம் உள்ளதால் அழுத்தித் துடைப்பதைத் தவிர்க்கவும். துணி மீது படிந்துள்ள சோப்
நுரைகளை நீக்க கறை இருந்த இடத்தை குளிர்ந்த நீரில் அலசிவிடவும். மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி பட்டாடைகள் மீது படியும் கரைகளை நீக்குங்க. கவலையை விடுங்க.