ARTICLE AD BOX
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரானது கடந்த பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவருகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைப்ரிட் மாடலில் நடைபெற்றுவரும் போட்டியில், இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவை பெற்றுள்ளன. அதில் இந்தியா இரண்டு முறையும், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய அணிகள் தலா ஒரு முறையும் வெற்றியை பதிவுசெய்துள்ளன.
இந்நிலையில், 6வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் வென்றால் மட்டுமே வங்கதேசம் அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்பதால் போட்டி கவனம் பெற்றது.
வங்கதேசத்தை வீழ்த்தியது நியூசிலாந்து..
பாகிஸ்தான் ராவல்பிண்டியில் பரபரப்பாக தொடங்கிய போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவரில் 236 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக வங்கதேச கேப்டன் ஷாண்டோ 77 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியில் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
237 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணியில், நெற்றியில் ஏற்பட்டகாயத்திற்கு பிறகு அணிக்குள் வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 112 ரன்கள் குவித்தார். உடன் டாம் லாதம் 55 ரன்கள் அடிக்க நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து.. PAK, BAN வெளியேற்றம்!
குரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம் முதலிய 4 அணிகள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்தியாவும், நியூசிலாந்தும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.
விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளீயேறியுள்ளன.