ARTICLE AD BOX
ராவல்பிண்டி: ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து, 46.1 ஓவரில் 5 விக்கெட் இழந்து 240 ரன் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகின்றன. சாம்பியன்ஸ் கோப்பைக்கான 6வது ஒரு நாள் போட்டி பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் நேற்று நடந்தது. இதில், ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள வங்கதேசம் – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.
துவக்க வீரர்களாக தன்ஸித் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசேன் ஷான்டோ களமிறங்கினர். 24 பந்துகளில் 24 ரன் எடுத்த தன்ஸித், பிரேஸ்வெல் பந்தில் வில்லியம்சனிடம் கேட்ச் தந்து அவுட்டானார். பின் வந்த மெஹிடி ஹசன் மிராஸ் 13 ரன்னில் ஓரூர்க்கி பந்தில் சான்ட்னரிடம் கேட்ச் தந்து வெளியேறினார். பின் வந்தோரில் தோஹித் ஹிருதோய் 7, முஷ்பிகுர் ரஹிம் 2, மஹ்மதுல்லா 4 என சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர். துவக்க வீரர் நஜ்முல் சிறப்பாக ஆடி 77 ரன் குவித்து அவுட்டானார். ஜேகர் அலி 45 ரன் சேர்த்து ரன் அவுட்டாகி வெளியேறினார். ரிஷத் ஹொசேன் 26ல் வீழ்ந்தார். 50 ஓவர் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட் இழந்து 236 ரன் எடுத்தது. நியூசி வீரர்களில் மைக்கேல் பிரேஸ்வெல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். வில் ஓரூர்க்கி 2, மேட் ஹென்றி, கைல் ஜேமிசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 237 ரன் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. துவக்க வீரர் வில் யங் ரன் எடுக்காமல் பூஜ்யத்தில் வீழ்ந்து அதிர்ச்சி தந்தார். மற்றொரு துவக்க வீரர் டெவோன் கான்வே 30 ரன் சேர்த்து அவுட்டானார். கேன் வில்லியம்சன் 5 ரன் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். நியூசி வீரர்களில் ரச்சின் ரவீந்திரா சிறப்பாக ஆடி 50 பந்தில் அரை சதம் எடுத்து ரன் வேட்டையை தொடர்ந்தார். 105 பந்துகளில் 112 ரன் எடுத்து அவர் அவுட்டானார். 46.1 ஓவரில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழந்து 240 ரன் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நியூசிலாந்து வென்றது.
* 4 விக்கெட் வீழ்த்தி பிரேஸ்வெல் அசத்தல்
வங்கதேசத்துடனான போட்டியில் நியூசிலாந்து வீரர் மைக்கேல் பிரேஸ்வெல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார். வங்கதேசம் 236 ரன்னுக்குள் சுருண்டதற்கு பிரேஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். 10 ஓவர்களை வீசிய அவர் 26 ரன்கள் மட்டுமே தந்து சிறப்பான பங்காற்றினார். வங்கதேச துவக்க வீரரகள் தன்ஸித் ஹசன், கேப்டன் நஜ்முல் ஹொசேன் ஷான்டோ நிலைத்து ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டபோது, முதல் விக்கெட்டாக தன்ஸித்தை வீழ்த்தி தனது அணிக்கு திருப்புமுனை ஏற்படுத்தியவரும் பிரேஸ்வெல்லே.
The post சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி. appeared first on Dinakaran.