ARTICLE AD BOX
உணவகங்களில் சாப்பிடுவதற்காக சில நேரம் நாம் செல்வோம். அங்கு பணம் செலுத்தும் இடத்தில் சோம்பு மிட்டாய் வைத்திருப்பார்கள். இதற்கான காரணம் என்ன என்று பலருக்கும் தெரியாது. அதன்படி, இதற்கான காரணத்தையும், சோம்பின் பயன்கள் குறித்தும் மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
சாப்பிட்டவுடன் சோம்பு எடுத்துக் கொண்டால், அது செரிமான மண்டலம் சீராக இயங்க உதவி செய்யும். குறிப்பாக, சோம்பில் அனிதோலோ என ஒரு வேதிப்பொருள் இருக்கிறது. இது வயிறு உப்புசமாக இருத்தல் மற்றும் வாயு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து தடுப்பதாக மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
இது தவிர, சோம்பில் அதிகப்படியான அன்டி பாக்டீரியல் தன்மை இருக்கிறது. இதனால் வாயில் இருந்து வரும் துர்நாற்றம் கட்டுப்படுத்தப்படுகிறது. சோம்பின் பி.ஹெச் அளவு இயற்கையாகவே அல்கலின் ஆக இருக்கிறது. இதனால் வயிற்றில் இருக்கும் அசிடிட்டியை வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
சிலருக்கு அடிக்கடி வயிறு இழுத்துப் பிடித்ததை போன்று வலி உருவாகும். சோம்பு சாப்பிடுவதன் மூலம் அந்த வலி குறையும் என்று மருத்துவர் பொற்கொடி தெரிவித்துள்ளார். எனவே, தினசரி சாப்பிட்டதும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு சோம்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார். இவ்வாறு செய்வதன் மூலம் குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
இந்தக் காரணத்திற்காக தான் பெரும்பாலும் உணவகங்களில் சோம்பு மிட்டாய் வைக்கப்பட்டிருக்கிறது. எனினும், மிட்டாய் வடிவத்தில் இருக்கும் சோம்பில் செயற்கையான இனிப்பு சுவை கலக்கப்பட்டிருக்கும். இதனால், நமக்கு கிடைக்க வேண்டிய இயற்கையான சத்துகள் பாதிக்கப்படக் கூடும்.
அந்த வகையில் மிட்டாய் வடிவத்தில் இல்லாமல் சாதாரணமாக இருக்கும் சோம்பை பயன்படுத்தலாம் என்று பல வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Dr.Porkodihari Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்