ARTICLE AD BOX
பண்டைய காலம் தொட்டே தமிழக மக்களின் வாழ்வில் விளையாட்டுகள் எப்போதும் ஒரு முக்கிய பகுதியாக இருந்து வந்ததற்கு சான்றுகள் உள்ளன. அந்த வகையில் இந்தியா பல்வேறு விளையாட்டுகளில் தேசிய, சர்வதேச அளவில் சாதனை படைத்து வரும் திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வருகிறது. மேலும் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களை மத்திய அரசும், மாநில அரசு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் கௌரவித்து வருகிறது. இந்திய வீரர்கள் உலகளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
சமீப காலமாக தொழில், பொருளாதாரம், உற்பத்தி, ஏற்றுமதி போன்றவற்றில் அதிக வளர்ச்சி அடைந்து உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்து வந்த இந்தியா, தற்போது விளையாட்டு போட்டிகளிலும் சாதனை படைத்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கடந்த சில வருடங்களாக இந்திய விளையாட்டு வீரர்கள் உலகளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர். உலக நாடுகளில் இந்திய வீரர்கள் கௌரவப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
மனு பாக்கர், வினேஷ் போகாட், பிரக்ஞானந்தா, ரவிச்சந்திரன் அஸ்வின், பும்ரா, நீரஜ் சோப்ரா, வி.பி. சிந்து என்று விளையாட்டில் சாதனை படைத்து வரும் இளம் விளையாட்டு வீரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அதுமட்டுமில்லாமல் விளையாட்டு வீரர்கள் உலகளவில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருவதுடன், போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
தமிழகத்தை சேர்ந்த குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகளவில் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதான குகேஷ் சீனாவின் டிங் லிரென்னை தோற்கடித்து உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். வரலாற்றிலேயே இளம் சாம்பியன் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் குகேஷ் .
இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று சாதனை படைத்திருந்தார். தற்போது உலக சாம்பியன் ஆன இரண்டாவது இந்தியர் என்ற பெருமையயை பெற்றுள்ளார் குகேஷ்.
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷை கௌரவிக்கும் பொருட்டு மத்திய அரசு அவருக்கு 2024-ம் ஆண்டில் விளையாட்டில் சாதித்த நட்சத்திரங்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் தியான் சந்த் கேல் ரத்னா விருதை வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் போட்டி நெதர்லாந்து நாட்டின் விஜ்க் ஆன் ஜீயில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்ட இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் ஜெர்மனியின் வின்சென்ட் கீமரை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் குகேஷ், FIDE தரவரிசையில் 2784 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மேலும் குகேஷ் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ வீரர் என்ற அந்தஸ்தை எட்டி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளார். குறைந்த வயதில் சாதனை மேல் சாதனை படைத்து இந்தியாவை உலக அரங்கில் தலை நிமிர செய்துள்ளார்.
நார்வேயை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் 2832.5 புள்ளிகளுடன் உலகளவில் முதலிடத்தில் தொடர்கிறார். இவரைத் தொடர்ந்து அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா 2-வது இடத்திலும், பாபியனோ கருவானா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.