ARTICLE AD BOX
பாகிஸ்தானின் லாகூரில் புதன்கிழமை நடைபெற்ற ஆப்கானிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் 177 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்தார். அவரது இன்னிங்ஸின் உதவியுடன், முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 325 ரன்கள் எடுத்தது.
லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெறும் குரூப் பி போட்டி ஒரு நாக் அவுட் போட்டியாக அமைந்துள்ளது. தோல்வியடையும் அணி போட்டியிலிருந்து வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும். இந்நிலையில், இந்தப் போட்டியில் முதலில் ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்தது.
ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் பெரும் பின்னடைவுகளைச் சந்தித்தது. வெறும் 9 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் விழுந்தன. அப்போது ஸ்கோர் 37/3 ஆக இருந்தது. பின்னர் ஜத்ரான் நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிடியுடன் (40) இணைந்து 103 ரன் பார்ட்னர்ஷிப் சேர்த்து இன்னிங்ஸை நிலைநிறுத்தினார். பின்னர் ஜத்ரான் ஆறாவது விக்கெட்டுக்கு முகமது நபியுடன் (24 பந்துகளில் 40) பார்ட்னர்ஷிப் அமைத்து 111 ரன்கள் சேர்த்தனர்.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலியை பின்னுக்குத் தள்ளி இப்ராஹிம் ஜத்ரான் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் எடுத்தார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள்:
177 ரன்கள் - இப்ராஹிம் சத்ரான்
165 ரன்கள் - பென் டக்கெட்
145 ரன்கள் - நாதன் ஆஸ்டில்
145 ரன்கள் - ஆண்டி ஃப்ளவர்
141* ரன்கள் - சவுரவ் கங்குலி
141 ரன்கள் - சச்சின் டெண்டுல்கர்
141 ரன்கள் - கிரேம் ஸ்மித்
23 வயதான இப்ராஹிம் சத்ரான் இங்கிலாந்தின் பந்துவீச்சைச் சிதறடித்து, 146 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 177 ரன்கள் எடுத்தார். 121.23 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி விரைவாக ரன்குவித்தார். இப்ராஹிம் ஜத்ரானின் இந்த 177 ரன்கள் சாதனையால், இங்கிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.