ARTICLE AD BOX
பர்தமான்: இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்து உள்ளார். இந்தச் சம்பவம் மேற்கு வங்காளத்தில் உள்ள புர்த்வான் மாவட்டத்தில் நடந்துள்ளது. சம்பவம் நடந்த போது கங்குலி அங்கு ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தார்.
துர்காபூர் எக்ஸ்பிரஸ்வே சாலையில் சவுரவ் கங்குலியின் கார் சென்று கொண்டிருந்தபோது, அதே பாதையில் ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. விபத்தைத் தவிர்ப்பதற்காக அந்த லாரி திடீரென பிரேக் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அதை எதிர்பாராத நிலையில் கங்குலியின் கார் ஓட்டுனரும் உடனடியாக பிரேக்கை அழுத்தியுள்ளார்.

கங்குலியின் கான்வாயில் பின்னே வந்த இரண்டு கார்களும் இதை எதிர்பார்க்கவில்லை. அந்த இரு கார்களும் அடுத்தடுத்து கங்குலியின் காரில் மோதியுள்ளன. இரண்டு அல்லது மூன்று கார்கள் இந்த விபத்தில் லேசாக பாதிப்படைந்துள்ளன. ஆனால் உள்ளே இருந்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் கங்குலி தனது காரில் அந்த பல்கலைக்கழக நிகழ்விற்குச் சென்றதாகத் தெரியவந்துள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டதை அடுத்து புர்த்வானில் உள்ள மைதானம் ஒன்றிற்கும் சென்றார் சவுரவ் கங்குலி. அங்கு ஒரு நிகழ்விலும் கலந்து கொண்டார். தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்து இந்த பொது நிகழ்ச்சியில் அவர் பெரிதாக எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சவுரவ் கங்குலி நலமாக இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளை நிம்மதியடையச் செய்துள்ளது.