சர்வதேச மகளிர் தினம்: தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் சில!

2 hours ago
ARTICLE AD BOX
சுருக்கம் செய்ய
தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள்!

சர்வதேச மகளிர் தினம் 2025: தமிழ் சினிமாவில் நம்மை கவர்ந்த பெண் கதாபாத்திரங்கள் சில!

எழுதியவர் Venkatalakshmi V
Mar 06, 2025
07:58 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்த் திரையுலகம் பெண்களுக்கு மென்மையான, விவேகமான வேடங்களை அரிதாகவே வழங்குகிறது.

திரைப்படத் தயாரிப்பின் அடிப்படையில் கோலிவுட் வளர்ச்சியடைந்திருந்தாலும், இந்தத் துறை பல ஆண்டுகளாக பெண்களை வெறும் கண்கவர் கதாபாத்திரங்களாகவே நடிக்க வைத்து வருகிறது.

இருப்பினும், பெண் நடிகர்கள் யதார்த்தமான, சுதந்திரமான மற்றும் துணிச்சலான கதாபாத்திரங்களை சித்தரித்த பல நிகழ்வுகள் உள்ளன.

இந்த சர்வதேச பெண்கள் தினத்தில், தமிழ்த் திரைப்படங்களில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்திக் கொண்ட, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த சில பெண் கதாபாத்திரங்கள் இங்கே.

கல்கி

துணிச்சலான பெண்ணாக 'கல்கி'

பிரகாஷ் ராஜ், கீதா, ஸ்ருதி ஆகியோர் நடித்து 1996-இல் வெளியான திரைப்படம் கல்கி.

இப்படத்தில் சாடிஸ்ட் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தனித்து வாழும் பெண்ணாக கீதாவும், அவளது நட்பிற்காகவும், அவளுடைய துயரை துடைக்க துணிந்து முடிவெடுக்கும் பெண்ணாக ஸ்ருதியும் நடித்திருந்தனர்.

ஸ்ருதி கதாபாத்திரம், அந்த காலத்தில் தைரியமான, சுய சிந்தனை கொண்ட பெண்ணாக சித்தரித்திருந்தார் இயக்குனர் கே.பாலச்சந்தர்.

தைரியமான, அடிமைத்தனத்தை எதிர்த்து கேள்வி கேட்க்கும் முற்போக்கு சிந்தனையும், அதை செயல்படுத்த துணிச்சலும் பெண்களுக்கு எப்போதும் தேவை என்பதை அழகாக திரையில் பிரதிபலித்தார் ஸ்ருதி என்ற கல்கி.

அரங்கேற்றம்

குடும்பத்தை காப்பாற்ற விபச்சார தொழிலை மேற்கொள்ளும் லலிதா- அரங்கேற்றம்

'அரங்கேற்றம்' படம் பிப்ரவரி 9, 1973 அன்று வெளியிடப்பட்டது.

இது கடுமையான செய்திகளையும் மிகவும் துணிச்சலான காட்சிகளையும் கொண்டிருந்தாலும், வெளியான நேரத்தில் சர்ச்சைக்குரியதாக இருந்தபோதிலும், படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இதுவும் கே.பாலச்சந்தரின் படைப்பாகும்.

கதையின் நாயகி பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பம், வயதான தாய், தந்தை, 5க்கும் மேற்பட்ட உடன்பிறந்தோர் என கஷ்டப்படுகிறாள்.

கௌரவமான முறையில் வருமானத்தை ஈட்ட அரும்பாடு பட்ட நிலையில், வேறு வழியில்லாமல் விபச்சாரத்தை தொழிலாக மேற்கொள்கிறாள்.

தன்னுடைய குடும்பத்தினரின் துயர் துடைக்க எந்த தொழிலும் நல்ல தொழிலே என பேசும் படம் இது.

மகளிர் மட்டும்

தைரியமும், துணிவும் கொண்ட பாப்பம்மா- மகளிர் மட்டும்

மகளிர் மட்டும் படம் 1994 பிப்ரவரி 25 அன்று வெளியிடப்பட்டது, வணிக ரீதியாக வெற்றி பெற்றது, 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

இப்படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த ஊர்வசிக்கு மாநில அரசின் விருதும் கிடைத்தது.

எனினும் ரசிகர்களை ஈர்த்தது என்னவோ துணிச்சலும், பாலியல் சீண்டலுக்கு எதிராக குரல் கொடுக்கும் தைரியமான பெண்ணாக பாப்பம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரோஹிணியை தான்.

வேலைக்கு செல்லாத குடிகார கணவருக்காகவும் சேர்த்து உழைக்கும் பெண் இந்த பாப்பம்மா.

அலுவலகத்தில் தன்னுடைய சக ஊழியருக்கு நடக்கும் பாலியல் சீண்டலை தடுப்பதாகட்டும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அசால்ட்டாக அணுகும் விதமாகட்டும், ரோகிணியின் கதாபாத்திரமே படத்தின் உயிர்நாடி எனக்கூறலாம்.

 சூரரைப் போற்று

சுயதொழில் செய்து கணவரின் கனவை நிறைவேற்றும் பொம்மி - சூரரைப் போற்று

சுயதொழில் செய்து கணவரின் கனவை நிறைவேற்றும் பொம்மி கதாபாத்திரம் சூரரைப் போற்று திரைப்படத்தின் நாயகி.

அபர்ணா பாலமுரளி நடிக்கும் பொம்மி எனப்படும் சுந்தரி, தனது கணவர் மாறாவின் கனவுகளை ஆதரிக்கும் ஒரு சுதந்திரமான பெண், அதே நேரத்தில் அவள் தனது கனவுகளையும் விட்டுக்கொடுக்கவில்லை.

தனக்குள் வீசப்படும் ஒவ்வொரு ஆணாதிக்க சிந்தனைக்கும் அவள் பதிலடி கொடுக்கிறாள்.

சூர்யா நடிக்கும் மாறா, 20 ஆண்கள் தன்னை நிராகரித்ததாகக் கூறும்போது, ​​அவரது வணிகக் கருத்துக்கள் மிகவும் நடைமுறைக்கு மாறானவை என்றும், 24 வங்கிகள் அவருக்குக் கடன் கொடுக்க மறுத்துவிட்டன என்றும் அவள் பதிலடி கொடுக்கிறாள்.

பொம்மியின் கதாபாத்திரம் பார்வையாளர்களிடமிருந்து நிறைய அன்பைப் பெறுவதைப் பார்ப்பது மனதுக்கு இதமாக இருந்தது.

தர்மதுரை

தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை சந்தித்தாலும் துவளாத உறுதி கொண்ட சுபாஷினி- தர்மதுரை

டாக்டர் சுபாஷினியாக தமன்னா நடித்திருந்த இந்த பாத்திரம், ஆர்ப்பாட்டமில்லாத அதே நேரத்தில் அழுத்தமான கதாபாத்திரம்.

தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சறுக்கல்கள் இருந்தாலும், தன்னுடைய பேராசிரியரின் அறிவுரையை ஏற்று பொதுமக்களுக்கு தொண்டு செய்வதில் தன்னை ஈடுபடுத்தி கொள்கிறாள்.

அதே நேரத்தில், தன்னுடைய கல்லூரி காலத்து நண்பன், தன்னிலை மறந்து குடிபோதைக்கு அடிமையானதை அறிந்ததும், அவரை மறுவாழ்வில் ஈடுபடுத்தி, அவர் வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனை ஏற்படுத்துகிறார்.

எந்த சூழலிலும் தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளாமல், தன்னை நாடி வந்த காதலையும் அப்படியே ஏற்றுக்கொண்ட மனப்பக்குவம் கொண்ட பெண்ணாக சுபாஷினி நம்மை ஈர்க்கிறார்.

Read Entire Article