ARTICLE AD BOX
வங்கதேசத்திற்கு எதிரான பாகிஸ்தானின் கடைசிப் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தது.
இத்தகைய சூழலில்தான், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் முகம்மது ஹஃபீஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை விமர்சித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். OutSide Edge எனும் நேரலை நிகழ்வில் முகம்மது ஹஃபீஸ், சோயிப் அக்தர் உள்ளிட்ட ஜாம்பவான்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
இதில் பேசிய ஹஃபீஸ், 1990களின் நட்சத்திரங்கள் ஐசிசி தொடரில் வெல்லத் தவறியதற்கு கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில், “நான் 1990களில் கிரிக்கெட் விளையாடியவர்களின் மிகப்பெரிய ரசிகன் நான். ஆனால், அவர்கள் பாகிஸ்தானுக்காக எதையும் விட்டுச்செல்லவில்லை. அவர்கள் ஒரு ஐசிசி தொடரிலும் கோப்பை வெல்லவில்லை. அவர்கள் 1996, 1999 மற்றும் 2003 உலகக்கோப்பை போட்டிகளில் கோப்பை வெல்லவில்லை. 1999ல் இறுதிப்போட்டி வரை சென்று மோசமாகத் தோற்றோம்.
முன்னாள் வீரர்கள் மெகா சூப்பர்ஸ்டார்கள்தான். ஆனால், ஒரு ஐசிசி போட்டியை வென்று அவர்களால் எங்களுக்கு உத்வேகம் அளிக்க முடியவில்லை. பின் 2007ல் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் நாங்கள் தோற்றோம். 2009ல் யூனிஸ் கான் தலைமையின் கீழ் கோப்பை வென்றோம்; அது அடுத்த தலைமுறையினருக்கான உத்வேகமாக அமைந்தது. பின்னர், துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு மோசமான சம்பவம் நடந்தது, அதிலிருந்து நம்மால் இன்னும் மீள முடியவில்லை. ஆனாலும், 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றோம். அது மீண்டும் உந்து சக்தியாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.
இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், சோயிப் அக்தர் 1990களின் இறுதிக் காலக்கட்டத்தில் பாகிஸ்தான் அணியின் முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் என்பதும், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் சோபிக்காததை கடுமையாக விமர்சனம் செய்தவர் என்பதுதான்.
ஹஃபீஸின் பேச்சிற்குக் குறுக்கிட்ட சோயிப் அக்தர், “இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வென்ற 73 ஒருநாள் போட்டிகளில், அதிகம் வென்றது நாங்கள்தான்” எனத் தெரிவித்தார். அப்போது, இம்ரான் கான் தலைமையிலான முயற்சிகளை ஹஃபீஸ் ஒப்புக்கொள்ள முயற்சிக்கும்போது குறுக்கிட்டுப் பேசிய அக்தர், “நீங்கள் எதையும் மறைக்க முடியாது. வீடியோவில் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏற்கனவே அனைத்து பெரிய வீரர்களைப் பற்றியும் பேசிவிட்டீர்கள்” எனத் தெரிவித்தார்.
இந்தியா பாகிஸ்தான் போதிய முதல் ஒருநாள் போட்டி 1978 அக்டோபர் 1ஆம் தேதி நடந்தது. இதில், இந்தியா வென்றாலும், 1999 வரையில் பெரும்பான்மையான ஒருநாள் போட்டிகளை பாகிஸ்தான் தான் வென்றுள்ளது. இடையிடையே ஒரு சில போட்டிகளை இந்தியா வென்றாலும், மொத்தமாக ஆதிக்கம் செலுத்தியது பாகிஸ்தான் தான். இதையொட்டித்தான் சோயிப் அக்தர் தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறி கிட்டத்தட்ட 10 நாட்களுக்கும் மேல் ஆகப்போகும் நிலையில், அந்நாட்டில் பாக். கிரிக்கெட் அணியின் செயல்பாடு குறித்தான விமர்சனம் இன்னும் ஓயவில்லை...