ARTICLE AD BOX

Image Courtesy: @IndianFootball
ஷில்லாங்,
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றுக்கு இந்திய அணி தயாராகும் வகையில் சர்வதேச நட்புறவு போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி இந்தியா- மாலத்தீவு அணிகள் இடையிலான சர்வதேச கால்பந்து போட்டி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறியது.
உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த இந்திய வீரர்கள் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினர். 34-வது நிமிடத்தில் ராகுல் பெகேவும், 66-வது நிமிடத்தில் லிஸ்டன் கோலக்கோவும் கோல் அடித்தனர். 76-வது நிமிடத்தில் சக வீரர் கோலக்கோ தட்டிக்கொடுத்த பந்தை மூத்த வீரர் சுனில் சேத்ரி தலையால் முட்டி வலைக்குள் திணித்தார்.
முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்தது. 2023-ம் ஆண்டு நவம்பருக்கு பிறகு இந்திய அணி ருசித்த முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முந்தைய 12 சர்வதேச ஆட்டங்களில் ஒன்றில் கூட இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக ஆசிய கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்திய அணி வருகிற 25-ந்தேதி வங்காளதேசத்தை இதே மைதானத்தில் சந்திக்கிறது.