ஐ.பி.எல்.2025: அவரது பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை - ஹர்திக் பாண்ட்யா ஆதரவு

6 hours ago
ARTICLE AD BOX

image courtesy: PTI

மும்பை,

சென்னை, மும்பை, கொல்கத்தா பெங்களூரு உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அரங்கேறுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

அடுத்த நாள் (23-ந் தேதி) சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

கடந்த சீசனில் 3 முறை குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்காததால் மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் இந்த போட்டிக்கான மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்பட உள்ளார்.

இருப்பினும் தற்சமயம் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகிறார். அவரது இந்த மோசமான பார்ம் மும்பை அணிக்கு பலத்த பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனெனில் மேட்ச் வின்னரான அவர் பேட்டிங்கில் அசத்தும் பட்சத்தில் மும்பை அணி எளிதில் வெற்றி பெறும்.

இந்நிலையில் சூர்யகுமார் யாதவின் பார்ம் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "சூர்யகுமார் யாதவ் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அவர் பல வருடங்களாக நிறைய ரன்கள் குவித்து வருகிறார். எனக்கு அவர் பார்ம் குறித்து கவலை இல்லை. அவர் அற்புதமான பேட்ஸ்மேன். இந்தியாவுக்கும் மும்பை இந்தியன்சுக்கும் பல போட்டிகளை தனி ஆளாக வென்று கொடுத்துள்ளார். அவர் எப்போதும் அணிக்குள் உற்சாகத்தை கொண்டு வருவார்" என்று கூறினார்.

Read Entire Article