சர்வதேச கிரிக்கெட்டில் 27,503 ரன் பான்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி சாதனை

3 hours ago
ARTICLE AD BOX

துபாய்: சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து விராட் கோஹ்லி 27,503 ரன் குவித்து, இப்பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சாம்பியன்ஸ் கோப்பைக்காக துபாயில் நேற்று முன்தினம் நடந்த ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இந்திய நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி 111 பந்துகளை சந்தித்து சதம் விளாசினார். இது, ஒரு நாள் போட்டிகளில் அவரது 51வது சதமாகும். ஒரு நாள் போட்டிகளில் அதிக சதங்கள் குவித்த வீரராக அவர் நீடிக்கிறார். பாக். உடனான போட்டியில் பல்வேறு சாதனைகளை கோஹ்லி தகர்த்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் வெறும் 287 இன்னிங்ஸ்களை மட்டுமே ஆடி அதிவேகமாக 14,000 ரன் குவித்த வீரர் என்ற சாதனையை கோஹ்லி நிகழ்த்தினார். அத்துடன் நில்லாமல், பாக். வீரர்களின் 2 கேட்ச்களை கோஹ்லி அற்புதமாக பிடித்திருந்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் அதிகபட்சமாக 158 கேட்ச்கள் பிடித்த இந்திய வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார். இந்த பட்டியலில் முகம்மது அசாருதீன் 156 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். சச்சின் 140, ராகுல் டிராவிட் 124, சுரேஷ் ரெய்னா 101 கேட்ச்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். பாக்.கிற்கு எதிராக சதமடித்ததை அடுத்து, டெஸ்ட், ஒரு நாள், டி20 போட்டிகள் என அனைத்து வித போட்டிகளிலும் சேர்த்து கோஹ்லி குவித்த ரன்கள் எண்ணிக்கை 27,503 ஆக உயர்ந்துள்ளது. இதில் 82 சதங்கள், 142 அரை சதங்கள் அடங்கும். அவரது சராசரி ரன் குவிப்பு, 52.38 சதவீதம்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த ஆஸி ஜாம்பவான் ரிக்கி பான்டிங்கை (27,483 ரன்), கோஹ்லி பின்னுக்கு தள்ளியுள்ளார். தற்போது கோஹ்லிக்கு முன்னதாக 2வது இடத்தில் இலங்கை வீரர் சங்கக்கரா (28,016 ரன்) உள்ளார். முதலிடத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (34,357 ரன்) நீடிக்கிறார். சங்கக்கராவை முந்த, கோஹ்லிக்கு வெறும் 514 ரன்களே தேவை. விரைவில் அந்த இலக்கை கோஹ்லி எட்டி விடுவார் என்பதில் ஐயமில்லை. தவிர, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன் எடுத்துள்ள 2வது வீரராக திகழும் சங்கக்கராவை (14,234 ரன்) முந்த கோஹ்லிக்கு (14,085 ரன்) இன்னும் 150 ரன்களே தேவை. இந்த பட்டியலில் டெண்டுல்கர் 18,426 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

The post சர்வதேச கிரிக்கெட்டில் 27,503 ரன் பான்டிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோஹ்லி சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article