ARTICLE AD BOX
மராத்திய பேரரசர் சத்ரபதி சிவாஜி - சாயிபாய் தம்பதியின் மூத்த மகனான சத்ரபதி சம்பாஜி மகாராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் 'சாவா'. புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் சிவாஜி சாவந்த் எழுதிய சாவா (சிங்கக்குட்டி) என்ற நாவலை தழுவி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் கதாநாயகனாக சத்ரபதி சம்பாஜி மகாராஜா கதாபாத்திரத்தில் பாலிவுட் முன்னனி நடிகர் விக்கி கவுஷலும், சம்பாஜியின் மனைவி யேசுபாய் போன்ஸ்லே கதாபாத்திரத்தில் ரசிகர்களால் 'நேஷனல் க்ரஷ் ஆஃப் இந்தியா' என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனாவும், அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் வினோத் கண்ணாவும் நடித்துள்ளனர் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர் என்றே சொல்ல வேண்டும். இவர்களுடன் இந்த படத்தில் அசுதோஷ் ராணா, வினீத் குமார் சிங், திவ்யா தத்தா மற்றும் டயானா பென்டி போன்ற நடிகர்களும் நடித்துள்ளனர். லக்ஸ்மன் உடேகர் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தின் இறுதிக் காட்சியில் சம்பாஜி மஹாராஜா முகலாய படைகளால் துன்புறுத்தப்படுவதைப் பார்த்து திரையரங்கில் ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுகிறார்கள்.
இந்த படத்தில் ஆடியோ ரிலீஸ் பிப்.13-ம்தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளே அதாவது காதல் தினத்தன்று (பிப்.14-ம்தேதி) இந்த படம் வெளியாகி தற்போது வரை ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருப்பது மட்டுமின்றி பாக்ஸ் ஆபிஸில் சக்கை போடு போட்டு வருகிறது.
ரூ.130 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் ரூ.50 கோடி வசூல் செய்து இந்தாண்டில் இதுவரை வெளியான பாலிவுட் படங்களிலேயே முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற சாதனையை படைத்தது. அதுமட்டுமின்றி, இப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் ரூ.450 கோடிக்கு அதிகமாகவும், இந்தியாவில் மட்டும் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி 'சாவா' படத்தை வெகுவாக பாராட்டினார். இந்த படத்திற்கு ஏற்கனவே மத்தியப் பிரதேச மாநிலம் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கோவா மாநிலத்திலும் வரிவிலக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 'சாவா' திரைப்படத்துக்கு சத்தீஸ்கா் மாநிலத்திலும் வரி விலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடா்பாக சத்தீஸ்கா் மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சிங் வெளியிட்ட அறிக்கையில், சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சம்பாஜியின் புகழை அறிந்து கொள்ள அனைத்து மக்களும் இத்திரைப்படத்தைக் காண வேண்டும். மேலும் சத்ரபதி சம்பாஜியின் வீரம், தியாகம், அறிவுக்கூா்மை ஆகியவை 'சாவா' படத்தில் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டாா்.