ARTICLE AD BOX
இந்த வாரம் சப்தம், அகத்தியா என இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன. இந்த இரண்டு படங்களுக்கும் நடுவில் இருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை 'பேய்'.
முதலில் சப்தம் படத்தை பற்றி பார்ப்போம்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆதி நடிப்பில் அறிவழகன் இயக்கத்தில் ஈரம் படம் வெளியானது. மீண்டும் அதே கூட்டணியில் இந்த சப்தம் படம் வெளியாகி உள்ளது. சில கருவிகளை பயன்படுத்தி அதன் ஒலிகளை உணர்ந்து அமானுஷ்யங்களுடன் உரையாற்றும் திறமை பெற்றவர் ஆதி. மூணாரில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் சிலர் தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள். இது ஏதோ பேய் வேலை என்று நம்பும் கல்லூரி நிர்வாகம் ஆதியை அழைத்து கண்டு பிடிக்க வேண்டுகிறது. அங்கே மாணவியாக இருக்கும் லக்ஷ்மி மேனனுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கும் என சந்தேகம் கொள்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில மரணங்களுக்கும் இப்போது நடக்கும் தற்கொலைகளுக்கும் சம்மந்தம் உள்ளது என்பதை தன் கருவிகள் வழியாக கண்டு பிடிக்கிறார். என்ன தொடர்பு என்பதை சப்தம் சொல்கிறது.
இனி ஓவர் டு அகத்தியா.
பாடலாசிரியர் பா.விஜய் இப்படத்தை இயக்கி உள்ளார். அர்ஜுன், ஜீவா ராஷி கண்ணா இப்படத்தில் நடித்துள்ளார்கள். பாண்டிசேரியில் உள்ள ஒரு பழைய பிரெஞ்சு பங்களாவை வாடகைக்கு எடுத்து பேய் பங்களா போல செட்டிங் செய்து பொது மக்களை பார்வைக்கு வர வைத்து பணம் சாம்பாதிக்கிறார் ஜீவா. எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன் தாய்க்கு மருத்துவம் பார்த்து வருகிறார். அந்த பங்களாவில் ஒரு பழைய பிலிம் ரோல் கிடைக்கிறது. அதன் மூலமாக எண்பது ஆண்டுகளுக்கு முன்பு அந்த பங்காளாவில் வாழ்ந்த ஒரு சித்த மருத்துவரை பற்றி தெரிந்து கொள்கிறார். தனது அம்மாவுக்கு அந்த பங்களாவில் மருந்து இருக்கும் என்று நம்புகிறார். அந்த மருந்து தன் அம்மாவுக்கு கிடைத்ததா என்பதே அகத்தியா சொல்லும் கதை.
சப்தம் படத்தை பொறுத்தவரை தொழில் நுட்ப ரீதியாக மிகவும் ஸ்டராங்கான படமாக வந்துள்ளது. ஒலியின் மூலமாவே ஆமானுஷ்யத்தை உணர வைத்திருக்கிறது தமனின் இசை. அருண் பதமனாபனின் ஒளிப்பதிவில் மூணாரு பகுதியின் பனிப்புகை ஒரு கவிதை போல் வருகிறது. திரையில் விஸுவல் எதுவும் இல்லாமல் வெறும் சப்தம் மட்டுமே சில நிமிடங்கள் வருவது நன்றாக இருக்கிறது. சப்தத்தில் முதல் பாதி வரை கதை நகரும் விதம் ஒரு மாறுபட்ட களத்தில் இருக்கிறது. இரண்டாம் பாதி மிக சாதாரண நகர்ந்து முடிகிறது.
அகத்தியா மற்றொரு பங்களா பேய் படம். வரலாற்று பேய் படங்களில் பிரிட்டிஷ்காரர்கள் பேய்களாக வருவார்கள். இந்த படத்தில் பிரெஞ்சுகாரர்கள் பேய்களாக வருகிறார்கள். இது மட்டும் தான் வித்தியாசம். சித்த வைத்தியம் சிறந்த வைத்தியம் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் புற்றுநோய்க்கும் சித்தவைத்தியத்தில் மருந்து உள்ளது என எந்த ஆராய்ச்சிகளாவது சொல்லியுள்ளதா? பா. விஜய்க்கு மறைந்த முதல்வர் கருணாநிதி மீது அபிமானம் இருக்கலாம். ஆனால் 1940 ல் முரசொலி பத்திரிகை இருந்தது என்று படத்தில் சொல்வதை உடன் பிறப்புகளே ஏற்று கொள்ள மாட்டார்கள். படத்தின் ரியல் ஹீரோ சண்முகநாதனின் ஆர்ட் டைரக்ஷன்தான். இரண்டு வெவ்வேறு காலகட்டத்தை தனது ஆர்ட் டைரக்ஷனில் உயிர் கொடுத்து இருக்கிறார். ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் வரலாற்று காதபாத்திரத்திரத்திற்கு கவனத்துடன் ஆடைகளை தேர்ந்தெடுத்து உள்ளார். யுவனின் இசையில் என் இனிய பொன் நிலாவே ரீமிக்ஸ் மட்டுமே கேட்கும் படி உள்ளது.
சப்தம் படத்தில் ஆதி படம் முழுவதும் இறுக்கமான முகத்தில் சரியான நடிப்பை தந்துள்ளார். லக்ஷ்மி மேனன் கம் பேக் தந்து சிறப்பாக நடித்துள்ளார்.
அகத்தியாவில் ஜீவா ஓரளவும், அர்ஜுன் சிறப்பாகவும் நடித்துள்ளார்கள். அகத்தியா ஹீரோயின் ராஷி கண்ணா வழக்கமான டெம்ப்லேட் ஹீரோயின் போல் வந்து போகிறார்.
தொழில் நுட்பத்தை ரசிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சப்தம் சரியான தேர்வாக இருக்கும். லாஜிக் பார்க்க மாட்டேன் ஒரு பேன்டசி படம் பார்த்தால் போதும் என்பவர்கள் அகத்தியாவுக்கு செல்லலாம்.