ARTICLE AD BOX
நடிகை சமந்தா தான் பின்பற்றும் உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கம் குறித்து அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார். இந்நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். "நான் காலையில் எழுந்ததும் சில விஷயங்களை எழுத தொடங்குவேன். இது, அந்த நாளை சிறப்பாக மாற்ற உதவி செய்கிறது. இதையடுத்து, சூரிய ஒளி படும் வகையில் 5 நிமிடங்கள் அமர்ந்து இருப்பேன். மேலும், விம் ஹாஃப் முறையில் சுவாச பயிற்சி மேற்கொள்வேன். 25 நிமிடங்களுக்கு தியானம் செய்வேன்" எனக் குறிப்பிட்டுருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Samantha swears by Wim Hof breathing technique: Here’s how it can set the tone for your day
"இந்த சிறிய நடைமுறை முதலில் நுட்பமாகவும், எளிமையாகவும் உணரலாம், ஆனால் நீங்கள் எல்லாவற்றையும் பார்க்கும் விதத்தை மாற்றும் சக்தி இதற்கு உண்டு. முயற்சித்துப் பாருங்கள் - இது எனக்கு ஒரு கேம் சேஞ்சராக இருந்தது" என்று சமந்தா கூறியிருந்தார்.
விம் ஹாஃப் முறை என்றால் என்ன?
இந்த சுவாச பயிற்சி முறை நான்கு படிநிலைகளை உள்ளடக்கியது:
1: சௌகரியமாக இருக்க வேண்டும்
உட்கார்ந்து அல்லது படுத்துக் கொள்ளக்கூடிய நிலையில் நீங்கள் சௌகரியமாக இருக்க. தளர்வான ஆடைகளை அணியுங்கள். உங்கள் வயிறு சுதந்திரமாக விரிவடையும் வகையில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
2: 30 ஆழமான சுவாசம்
கண்களை மூடிக்கொண்டு மனதை தெளிவுபடுத்துங்கள். உங்கள் வயிற்றை வெளியே தள்ளி, மூக்கு அல்லது வாய் வழியாக ஆழமாக சுவாசத்தை உள்ளிழுக்கவும். உங்கள் நுரையீரல் நிரம்பியவுடன், சுவாசத்தை நிதானமாக வெளியே விட வேண்டும். இவ்வாறு 30 முறை செய்ய வேண்டும்.
3: தக்கவைத்தல் நிலை
இறுதியாக சுவாசத்தை வெளியேற்றிய பிறகு, மீண்டும் சுவாசிக்க தோன்றும் வரும் வரை உங்கள் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள்.
4: மீட்பு சுவாசம்
ஒரு பெரிய மூச்சை இழுக்கவும். மீண்டும் உங்கள் வயிற்றை முழுமையாக விரிவுபடுத்தவும். அந்த மூச்சை 15 விநாடிகள் தக்க வைத்திருங்கள். பின்னர் அதனை வெளியே விடவும். இப்படி செய்யும் போது ஒரு சுற்று நிறைவு பெறும்.
இந்த பயிற்சி உடலைக் கட்டுப்படுத்துவதற்கு அற்புதமான நுட்பம் என்று வல்லுநர் பூஜா பேடி தெரிவித்துள்ளார். எனினும், இதில் இருக்கும் சவால்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உங்கள் குறிக்கோள் ரிலாக்ஸ் செய்வது மற்றும் குணப்படுத்துதல் என்றால், பாராசிம்பேடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துவது முக்கியம். இது ஓய்வு, செரிமானம் மற்றும் பாதுகாப்பு உணர்வை ஊக்குவிக்கிறது. இந்த முறையை நீங்கள் செய்ய வேண்டுமா? இல்லையா? என்பது நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனதில் கொள்ள வேண்டியவை:
விம் ஹாஃப் பயிற்சியை தவறாக செய்தால் அவை, சில சந்தர்ப்பங்களில் சுயநினைவை இழக்க வழிவகுக்கும். இதை செய்யும் போது உட்கார்ந்து அல்லது படுத்துக் கொண்டு செய்ய வேண்டும். இதனை நீர்நிலைகள், வாகன மாசுபாடு நிறைந்த இடங்களில் செய்யக் கூடாது.