ARTICLE AD BOX
7ஜி பிலிம்ஸ், ஆல்பா பிரேம்ஸ் அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா, ரெடின் கிங்ஸ்லி, ராஜிவ் மேனன், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ சப்தம் ‘ . மூணாறில் மிகப்பெரிய மெடிக்கல் கல்லூரி ஒன்று, அங்கே மர்மமான முறையில் மாணவ மாணவியர் தற்கொலை மற்றும் மரணங்கள் நிகழ்கின்றன. போலீஸ் விசாரணை ஒரு பக்கம் நடந்தாலும் இன்னொரு புறம் ஏன் இந்த கொலைகள் நிகழ்கின்றன என தெரிந்து கொள்ள கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர் அல்லது பாரா நார்மல் இன்வெஸ்டிகேட்டராக இருக்கும் ரூபன் ( ஆதி) வரவழைக்கப்படுகிறார் . அங்கே நரம்பியல் பேராசிரியர் மற்றும் மருத்துவராக வேலை செய்கிறார் அவந்திகா ( லட்சுமி மேனன்) . இறந்த மாணவ மாணவியர் அவந்திகாவின் வகுப்பு மாணவர்கள் என்பது தெரிய வருகிறது. அடுத்தடுத்த கட்ட விசாரணைகள் மேலும் பல மர்மமான சம்பவங்கள், தடயங்களை உருவாக்குகின்றன.
தொடர்ந்து அந்த கல்லூரியில் கேட்கும் விசித்திரமான ஒலி, மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் மரணம், நிகழும் அசம்பாவிதங்கள் என அனைத்தும் சேர்ந்து முடிவு என்ன அந்த கல்லூரிக்கு என்ன ஆனது என்பது மீதி கதை. பாரா நார்மல் இன்வெஸ்டிகேட்டர் கேரக்டருக்கு அற்புதமாக பொருந்தி போகிறார் ஆதி. அவருடைய உடல்வாகு மற்றும் குரல் மேலும் அவருடைய கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கிறது. இதுவரையிலும் இல்லாத வித்தியாசமான ப்ரொபசர் கேரக்டரில் லட்சுமிமேனன் தனக்கான பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். மேலும் மர்மங்கள் நிறைந்த அவரது முகமும் தோற்றமும், குறிப்பாக பார்க்கும் பார்வை என அனைத்திலும் ஒரு அளவுகோலை செட் செய்து நடித்திருக்கிறார். சிம்ரன், லைலா இருவருமே ‘ பார்த்தேன் ரசித்தேன் ‘ படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் இணைந்து நடித்திருக்கிறார்கள். எப்படி அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாதோ அப்படி இந்த படமும் மறக்க முடியாது.
இருவருக்குமே மிகவும் வித்தியாசமான கதாபாத்திரம் மற்றும் கேரக்டர் ஸ்கெட்ச். ஒரு சில நிமிடங்கள் வந்தாலும் எம்எஸ் பாஸ்கர் மற்றும் ராஜீவ் மேனன் கேரக்டரும் மனதில் இடம் பிடிக்கிறது. ரெடின் கிங்ஸ்லீ கதாபாத்திரம் பயத்தையும் மீறி சில இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறது. படத்திற்கு மிகப்பெரிய பலம் சப்தம் என்கிற தலைப்பு எனில் அதற்கு நியாயம் சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்ட ஒலி கலவைதான். படம் முழுக்க வெறும் சத்தத்தை கொண்டே மிரட்டி இருக்கிறார்கள் உதய்குமார் மற்றும் சிங்க் சினிமா. படத்தின் தலைப்பு டிசைனிலிருந்து கதை சொல்லும் வழக்கம் கொண்டவர் அறிவழகன். இந்தப் படத்திலும் அதை கடைப்பிடித்திருக்கிறார். கதையில் ஆங்காங்கே சில சறுக்கல்கள் இருப்பினும் திரையரங்க அனுபவம் கொடுக்க தங்களால் முடிந்த அளவு முயற்சி செய்திருக்கிறார்கள். எடிட்டர் சாபு ஜோசப், தேசிய விருது கொடுத்தே பராட்டாப்பட்டவர் என்கையில் இப்படத்தில் சொல்ல வேண்டுமா.
பல கட்- டு -கட் காட்சிகளே அரட்டுகின்றன. அருண் பத்மநாபன் விஷுவல் காட்சிகள், நியான் லைட் பிரேம்ங்கள் , கல்லூரியின் கிரே ஷேட் ரூம்கள் என அனைத்தும் மெனக்கெடலே இல்லாமல் மிரட்டுகின்றன. ஹாரர் திரில்லர் என்னும் அடிப்படை கருவை எடுத்துக்கொண்டு அதில் ஒரு எளிமையான கதை சொல்லி இருக்கலாம். ஆனால் மிகப் பரிய கருத்தை முன்வைக்க முயற்சி செய்து ஒரு சில இடங்களில் நீளமான காட்சிகளும், கதையின் விறுவிறுப்பை தடுக்கும் பிளாஷ்பேக்குகளும் சற்றே சலிப்பூட்டுகின்றன. அவற்றைத் தவிர்த்திருக்கலாம். தமன் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் குறிப்பாக மாயா மாயா பாடல், மற்றும் பியானோ ஒலி நம்மையும் சேர்த்து ஒரு மர்ம உலகிற்கு அழைத்துச் செல்கிறது. மொத்தத்தில் அறிவழகன் படங்களுக்குத் தனி ரசிகர்கள் இருப்பர் அவர்கள் எதிர்பார்ப்பு சற்றே ஏமாற்றப்பட்டிருந்தாலும், எப்படி இருந்தாலும் என்னை மிரட்டினால் போதும் ஒரு நல்ல திரையரங்க அனுபவத்துடன் ஹாரர் படம் பார்க்க வேண்டும் என நினைக்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் சப்தம் ஏமாற்றாது.