ARTICLE AD BOX
சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்கள் சீரிய முறையில் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள். தங்களை தேர்ந்தெடுத்த மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை உணர்ந்து, அதற்கான கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுபோகும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குரியது. கடந்த 7-5-2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில், பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 'உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்' என்ற புதிய திட்டம் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைக்கு வரப்போகிறது என்பதை அறிவித்த நேரத்தில், "ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத அவசிய தேவைகள் குறித்து செய்யும் பரிந்துரைகள் அடிப்படையில், அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பரிசீலனை செய்வார்கள். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தற்போது நடைமுறையில் உள்ள அரசு திட்டங்களின் கீழ் செயல்படுத்த முடியாத திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் நிறைவேற்றுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது" என்று அறிவித்தார். 3 மாதங்கள் கழித்து, எந்தெந்த திட்டங்களை பரிந்துரைக்கலாம் என்பதை அவர் பட்டியலிட்டு இருந்தார்.
"குடிநீர் மற்றும் நீர் ஆதாரத்தை மேம்படுத்தக்கூடிய உள்கட்டமைப்பு வசதிகள், வேளாண் உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்குரிய பணிகள், இணைப்பு பாலங்கள் மற்றும் சாலைகள், மருத்துவ வசதிகள், பள்ளி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. போன்ற புதிய கல்வி நிறுவனங்கள் அல்லது தற்போதுள்ள கல்வி நிறுவனங்களில் தேவைப்படும் உள்கட்டமைப்பு பணிகள், தொழில் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய வசதிகள், மின் மயானம், நவீன நூலகம், நகர்ப்புறங்களில் ஒருங்கிணைந்த வசதிகளுடன் கூடிய பஸ் நிலையங்கள், புதிய சுற்றுலாதலங்கள் மற்றும் சுற்றுலாதலங்களை மேம்படுத்தும் பணிகள் போன்ற சமூக பொருளாதார மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் 10 கோரிக்கைகளை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரைக்கலாம்" என்று அறிவித்து இருந்தார்.
அதற்கேற்ப சட்டமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த பணிகளில் 7-10-2023 அன்று முதல்-அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனுமதி வழங்கிடும் உயர்நிலைக்குழு கூட்டத்தில் ரூ.10 ஆயிரத்து 968 கோடியே 65 லட்சம் மதிப்பிலான 786 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அதில் 748 பணிகளுக்கு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், இப்போது 223 பணிகள் நிறைவேற்றப்பட்டும், 515 பணிகள் நடைபெற்றும் வருகின்றன. மீதம் உள்ள 38 பணிகளுக்கு ஆணை வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது.
இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் பல புதிய பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியில் நெடுங்காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள பல உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற ஆக்கப்பூர்வமான வகையில் பரிந்துரைத்து இருக்கிறார்கள். எந்தெந்த உறுப்பினர்கள், தங்கள் தொகுதிக்கு என்னென்ன திட்டங்களை பரிந்துரைத்து இருந்தார்கள்? அதில் என்னென்ன திட்டங்களுக்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது? என்ற பட்டியலையும் அரசு வெளியிட்டால் மக்களுக்காக சீரிய பணிகளை நிறைவேற்றிய சட்டசபை உறுப்பினர்களுக்கு அந்த தொகுதி மக்கள் சபாஷ் போடுவார்கள். இதுபோல, கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரைக்காத எம்.எல்.ஏ.க்களையும் மக்களே கேள்வி கேட்பார்கள். அவர்களும் இதுபோல தங்கள் தொகுதிக்கான திட்டங்களை கேட்டுப்பெற ஊக்குவிப்பதாக இருக்கும். இந்த திட்டம் ஒரு நேர திட்டமாகிவிடக்கூடாது, இது தொடர் திட்டமாக இருக்கவேண்டும்.