ARTICLE AD BOX
இந்தியாவில் சமீபகாலங்களாக நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளைக் கவனிக்கும் போது எழும் ஒரு பெரும் வினா, இந்தியா இப்போதும் ஒரு ஆன்மிக பூமிதானா? இந்தியர்களில் பெரும்பாலோர் ஆன்மிகத் தேட்டம் கொண்டவர்கள்தானா? என்பதே. நம்முடைய கவலை நம் எளிய குடிமக்களின் நடத்தை பற்றியதே. நம்ப இயலாத அளவுக்கு சடங்குகளின்மேல் இந்திய மக்கள் கொண்டுள்ள பிடிப்பு எதை உணர்த்துகிறது?
ஐநூறு ஆண்டுகளுக்குமுன் உலகம் நவீன கருத்தாக்கங்களால் மாற்றம் பெறத் தொடங்கியபோது அதன் அடிப்படையாய் இருந்தவைகளில் முக்கியமானது ‘பகுத்தறிவு வாதம்’. எதையும் தர்க்கபூர்வமாக சிந்தித்துப் புரிந்துகொள்வது. அதன் முதல் அடி மேற்கில் கிறித்தவத்தின் மேல்தான் விழுந்தது. சுயநலமிக்க திருச்சபைகள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஏற்படுத்தியிருந்த மூடத்தனங்களின் மேலான விமர்சனமாகத் தொடங்கி அடுத்த 300 ஆண்டுகளுக்குள் கணிசமானவர்கள் தங்களைச் சமய நீக்கம் செய்துகொள்ளத் தொடங்கினர். கடந்த நூறு ஆண்டுகளில் ஆலயங்கள் பக்தர்களற்றுப் போயின. கடந்த ஐம்பது ஆண்டுகளில் இங்கிலாந்தில் மட்டும் நூற்றுக்கணக்கான ஆலயங்கள் பராமரிப்பற்றுப் கைவிடப்பட்டுள்ளன. வீடுகளாகவும், சிற்றுண்டிச் சாலைகளாகவும் ஏன் மதுச்சாலைகளாகவும் கூட அவை மாற்றம் பெற்றன. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றுமான ஐரோப்பிய நாடுகளில் சொற்ப எண்ணிக்கையிலேயே பக்தர்கள் ஆலயங்களுக்குச் செல்கின்றனர். அதிலும் பெரும்பான்மையோர் எழுபதுகளைக் கடந்த முதியவர்கள். மேற்கத்திய நாடுகளில் நிறுவனமயப்பட்ட திருச்சபைகள் அதன் அந்திமக்காலத்தில் இருப்பதாகவே கொள்ளவேண்டும். காரணம் 1300களில் லட்சக்கணக்கில் மரணங்களை விளைவித்த கொள்ளை நோய்கள் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் உலகப்போர்கள் உண்டாக்கிய பேரழிவுகள் எதையும் தடுத்து நிறுத்த கர்த்தரோ அவரின் மைந்தனான இயேசுவோ வரவேயில்லை. வேறெந்தக் கடவுளும்கூட. ஆக கடவுள் என்றொருவர் ஆகாயத்தில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு உலகை பரிபாலனம் செய்வதில்லை என்பதை தங்கள் வாழ்வனுபவங்களிலிருந்தே அவர்கள் புரிந்துகொள்ளத் தொடங்கினார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளின் விளைவான நவீன மருந்துகளும் தொடர் போராட்டங்களும் செயல்பாடுகளுமே தனிமனித, சமூக மேம்பாட்டுக்குக் காரணமானவை என்பதைப் புரிந்துகொண்டனர். விளைவு படிப்படியாக மத நம்பிக்கைகள் மற்றுமான அர்த்தமற்ற சடங்குகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள ஆரம்பித்தனர். ஆக இன்று அமெரிக்காவில் 28% பேர் தங்களை எம்மதத்தையும் சாராதவர்களாக அறிவித்துக்கொண்டுள்ளனர். மகிழ்ச்சிக் குறியீட்டில் (Happiness index) உலக அளவில் முதலிடத்திலிருக்கும் பின்லாந்தில் 30%க்கும் மேற்பட்டோர் தம்மை மத நீக்கம் செய்துகொண்டவர்கள்தான். மேற்கத்திய நாடுகளில் வாழும் மதநம்பிக்கையாளர்களும்கூட தங்கள் மத நம்பிக்கையை வெளிப்படுத்த உடலை வருத்தும், உயிரை பணயம் வைக்கும் எந்த முயற்சிகளையும் செய்யக் கூடியவர்கள் இல்லை என்பதையும் இணைத்துக் கொள்ளவேண்டும்.
மேற்கண்ட நாடுகளை லட்சியநாடுகளாகக் கொண்டு அவர்களைப் பின்பற்றவேண்டும் என்பதல்ல நாம் சொல்ல விரும்புவது. ஒரு நவீன உலகக் குடிமக்களாக நாம் மதத்தை (ஆன்மிகத்தை அல்ல) அதன் சடங்குகளைக் கையாள்வது குறித்த புரிதலை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமான சடங்குகளை மேற்கொள்ளும் இந்து சமூகம், நாட்டுப்புற சமயத்தினருக்கும் இங்குள்ள கிறித்தவ இஸ்லாம் மற்றுமான சமயத்தினருக்கும் பாரிய வேறுபாடுகள் இல்லை என்றே சொல்லவேண்டும். வங்கித் தவணையில் பத்து லட்சத்திற்கு மகிழுந்து வாங்கும் ஒரு முதல் தலைமுறை வாகன கிறித்தவ உரிமையாளர் ‘என் சமூகம் உனக்கு முன்பாக இருக்கிறது’ என்ற விவிலிய வசனத்தை பின் கண்ணாடியில் பதித்துக் கொள்கிறார். சிலர் கையடக்கமான பைபிள் பிரதி ஒன்றையும் டாஷ் போர்டில் வைத்துக்கொள்வதுண்டு. இதையே ஒரு இந்து கருப்புக் கயிறு கட்டி ‘வழி விடு முருகா’ என்று கொட்டை எழுத்தில் பொறித்து பத்து ரூபாய் எலுமிச்சை பழத்தை நசுக்கித் தன் பயணத்தைத் தொடங்குவார். இஸ்லாமியரும் சளைத்தவரல்லர். இறைவன் மிகப் பெரியவன் எனும் வாசகத்துடன் அவருக்கான சடங்குகளைச் செய்து கொள்கிறார். ஆனால் நெடுஞ்சாலைகளில் ‘என் சமூகமும்’, ‘வழி விடு முருகாவும்’, ‘மிகப்பெரிய இறைவனும்’ ஆங்காங்கே புளிய மரத்தை முத்தமிட்டுக் கிடப்பதைக் காண்கிறோம். ஒரு நவீன மனிதனாக நாம் புரிந்து கொள்ளத் தவறியது, வாகனம் என்பது ஓர் இயந்திரம், அதைக் கையாள்வதற்கான பயிற்சியும் விதிகளும் அவசியம். ஒரு பயணத்தில் விபத்துக்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் தற்செயலானவையே தவிர எந்த கடவுளாலும் தீர்மானிக்கப்படுகிறவையோ அல்லது தடுத்து நிறுத்தப்படுகிறவையோ அல்ல. 2022 இல் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடியே 25 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கிறார்கள். இதில் 25% விபத்துகளே எந்திரக் கோளாறுகளால் நிகழ்ந்தவை. மீதமுள்ள 75% விபத்துகள் மனிதத் தவறுகளால் நிகழ்ந்தவை. இந்த தரவுகளின் அடிப்படையிலேயே உலகம் முழுமையும் ஓட்டுநர் உரிமம் வழங்குவதன் விதிகளைக் கடுமையாக மாற்றியிருக்கிறார்கள். சாலைவிதிகளை பின்பற்றுவதை கடமையாகக் கொள்கிறார்கள். இந்தப் புரிதல் இன்மையே உலகில் அதிக சாலை விபத்துகள் நடக்குமிடமாக இந்தியாவை மாற்றியிருக்கிறது. நாம் எல்லாவற்றையும் விட விதியை, கடவுளை எல்லாவற்றுக்குமான காரணங்களாகக் கற்பித்துப் பழகியிருக்கிறோம்.
இந்தியாவைப் பற்றி இன்னமும் பேசப்படும் பெருமிதங்களில் ஒன்று இந்தியா ஒரு ஆன்மிக பூமி. உண்மையில் இந்தியா ஆன்மிகபூமிதான். உலகின் நான்கு பெரு மதங்களில் இரண்டு மதங்கள் தோன்றிய நாடு. கலையின் உச்சத்தைத் தொட்ட தொன்மையான ஆலயங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. இந்து மதத்தின் ஆறு தரிசனங்களாகச் சொல்லப்படக்கூடிய தத்துவங்கள் உண்டு. ஆனால் இன்று இந்து மதம் என்பது என்ன? சமகால வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி சொல்கிறார் ‘இன்று மதங்கள் என்பவை அவற்றின் அற்புதமான கோட்பாடுகளோ தத்துவங்களோ அல்ல. மாறாக நடைமுறையில் மதங்கள் என்னவாக இருக்கின்றன என்பதுதான். கிறித்தவமும், இஸ்லாமும், இந்து மதமும் சக மனிதர்களுக்கு என்னவாக இருக்கின்றனவோ அவைதான்’ என்கிறார்.
ஆக இன்று மதம் என்பது வெற்றுச் சடங்குகளும், தங்களுடைய அன்றாட உலகாயத வாழ்வைச் செழுமைப்படுத்துவதற்கான கொடுக்கல் வாங்கலாக மாறியிருக்கிறதா? தேர்வில் தேர்ச்சி அடைவது, வேலைவாங்குவது, வீடு கட்டுவது, அமெரிக்காவில் பச்சை அட்டை பெறுவது ஆகியவற்றுக்கான உறுதுணையாகக் கடவுள் இருப்பார். அதற்கு பதிலாக அவருக்குச் செய்ய வேண்டுவனவற்றை முறையாகச் செய்துவிட வேண்டும். என்ன ஒரு அற்புதமான ஆன்மிகப் புரிதல். இந்தியாவில் எந்த மதத்தினரும் விதிவிலக்கானவர்கள் அல்லர். தனிப்பட்ட முறையில் ஒருவர் செய்யும் சடங்குகளையும் அவர்தம் நம்பிக்கையையும் எள்ளிநகையாடுவதல்ல நம் நோக்கம். இத்தகைய சடங்குகள் விளம்பரப்படுத்தப்பட்டு, பிரபலங்களால், உள்நோக்கமுடைய அரசுகளால் முன்னிலைப்படுத்தப்படுவதால் சீர்குலையும் சமூக நல்லிணக்கமும் உயிரிழப்புகளுமே நம்மைக் கவலை கொள்ள வைக்கின்றன.
21ஆம் நூற்றாண்டு மனித குலத்திற்கு எண்ணிறந்த சவால்களையும் அனுகூலங்களையும் முன் வைத்திருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரியல் துறைகளின் வளர்ச்சி மனிதர்களை கடவுளாக மாற்றிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். போதுமான வசதியிருக்கும் பட்சத்தில் நீங்கள் விரும்பும்காலம் உங்கள் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ள முடியும் என்பதான ஆச்சரியமூட்டும், அச்சமூட்டும் தகவல்களை அறிவியல் முன்மொழிகிறது. இங்கே கும்பமேளாவில் அறுபது கோடிகளைக் கடந்து பக்தர்கள் நீராடியதை இந்தியா சாதனையாகப் பேசி வருகிறது. தூய்மையாக ஓடிவரும் நீரில் மூழ்கி எழுவதனால் ஏற்படும் புத்துணர்வும் அதோடு இணையும் நம்பிக்கையும் ஒரு பக்தனுக்குப் பேரனுபவமாக இருக்கமுடியும்தான். ஆனால் கோடிக்கணக்கானவர்கள் தொடர்ந்து மூழ்கி எழும் நீர் என்னவாக மாறும் என்பதற்குப் பெரும் ஆராய்ச்சி எதுவும் தேவையில்லை.
30க்கும் மேற்பட்டவர்கள் நெரிசலில் உயிரிழக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகிறார்கள். புனித நீராடப் போகிற பக்தர்கள் சக மனிதர்களைப் பற்றிய கவலையின்றி ரயிலில் இடம்பிடிக்கிறார்கள். முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைகிறார்கள். ரயிலின் ஓட்டுநர் அறையைக் கூட விட்டு வைக்கவில்லை. இவை அனைத்துமே பக்தியின் பெயராலேயே நிகழ்கின்றன. இவையெல்லாம் நிகழ்வது 21ஆம் நூற்றாண்டில். 2005- மகாராஷ்ட்டிரா மந்தார்தேவி கோயில் நெரிசலில் 340, 2008- ராஜஸ்தான் சாமுண்டி கோயில் நெரிசலில் 250, 2008- இமாச்சல்பிரதேசத்தில் நயினாதேவி ஆலயத்தில் 162, 2010- உ.பி.யில் ராம் ஜானகி கோயிலில் 63, 2011-கேரளா சபரிமலை புல்மேட்டில் 106, 2013 - மத்தியப்பிரதேசத்தில் நவராத்திரி வழிபாட்டில் 115. 50க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை மட்டுமே இங்கு பதிவுசெய்துள்ளோம். இன்றுள்ள ஊடகங்களால் வழிபாட்டுத் தலங்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன என்பதே இந்த பேரிழப்புகளுக்குக் காரணம். போக்குவரத்து வசதிகள், பொருளாதார வசதிகளோடு பக்தர்களுக்குத் தீராத தேவைகளும், பிரச்னைகளும் இருந்துகொண்டே இருக்கின்றன என்றும் புரிந்துகொள்ளலாம். நம்பியார் எனும் நடிகர் ஐயப்ப பக்தராகி ஊடகங்களில் பேசப்பட்டதைத் தொடர்ந்தே சபரிமலைக்கு பெருமளவில் பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கினார்கள். இன்று அரசே இத்தகைய நிகழ்வுகளை ஊக்குவிக்கத் தொடங்கியிருக்கிறது. இப்படி பல்வேறு காரணங்களால் ஒரு இடத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவது தவிர்க்கப்படவேண்டுமல்லவா? லட்சக்கணக்கில் ஆண்டுதோறும் சபரிமலை சென்று வருவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் பற்றிய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளனவா? தற்போது 60கோடி மக்கள் வந்து சென்ற கும்பமேளாவில் மனிதக் கழிவுகளும் இன்னபிற குப்பைக் கூளங்களும் என்னவிதமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது பற்றித் தெரிந்தாலும் அதை வெளிப்படுத்த இயலாத அசாதாரணச் சூழலில் நாம் இருக்கிறோம்.
ஒரு காந்தியவாதியாகத் தன்னைக் கூறிக்கொள்பவர்கள், ஒரு இடதுசாரியாக தன்னை அறிவித்துக்கொள்பவர்கள், ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கென்று தனியான குணநலன்கள் உண்டு. இந்தியாவில் ஒரு இறை பக்தனாகத் தன்னை (எல்லா மதங்களைச் சேர்ந்தவர்களையும்) கூறிக்கொள்பவர்களுக்கென்று தனிப்பட்ட பண்பு நலன்கள் உண்டா? அவரவர்களின் மதக் கோட்பாடுகளும் நெறிகளும் அவர்களுக்கு எத்தகைய நற்பண்புகளை விதைத்திருக்கின்றன. தீவிரமான மதச் சடங்குகளைப் பின்பற்றுவதன்றி பொதுசமூகத்தின் மேம்பாட்டோடு எவ்வகையில் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்? இந்தியாவில் கடவுளின் பெயரால் எவ்வளவு நன்கொடைகளையும் திரட்ட முடியும். அதே நேரத்தில் கல்விக்காகவோ, கலை இலக்கிய நிகழ்வுகளுக்காகவோ நன்கொடைகள் சொற்பமாகவே கிடைக்கும்.
உலகளவில் தனிப்பட்ட முறையில் தங்கள் சேமிப்பை பொதுநலனுக்காக வழங்குவதில் எந்தெந்த நாட்டு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று தேடிப்பார்த்தபோது சில ஆச்சரியமான தகவல்களைக் காணமுடிந்தது. பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடுகளைச் சார்ந்தவர்களே அதிக நன்கொடை வழங்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்ற நம் எண்ணம் சரியானதல்ல. நாம் எதிர்பார்க்காத இந்தோனேசியா, மலேசியா, மால்ட்டா, தாய்லாந்து ஆகிய நாடுகளே எல்லாப் பட்டியல்களிலும் முதல் வரிசையில் காணப்படுகின்றன. இவற்றோடு பிரிட்டன், சிங்கப்பூர், ஐஸ்லாந்து, உக்ரைன் ஆகிய இன்னபிற நாடுகளும் உண்டு. ஆனால் எந்தப் பட்டியலிலும் நம் ஆன்மிகபூமி இல்லை.
இறைவனாலேயே எல்லாம் அருளப்பட்டன என்று நம்பும் இந்தக் கோடானுகோடி பக்தர்கள் தங்கள் வாழ்வில் நிறைவைக் காண்கிறார்களா? மகிழ்ச்சியானவர்களாக உணர்கிறார்களா? சக மனிதர்களோடு அர்த்தப்பூர்வமான தொடர்பைக் கொண்டிருக்கிறார்களா? என்ற வினாக்கள் பெரும் ஏமாற்றத்தையே அளிக்கின்றன. சடங்குகளால் சூழப்பட்ட இத்தகைய பக்தர்களையும் உள்ளடக்கித்தான் இந்தியாவை ஒரு ஆன்மிகபூமி என்று சொல்கிறோமா?
தற்செயலாய் அறிமுகமான ஒரு நண்பர் கெய்த். 50களில் இருக்கும் இவர் சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராய் இருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுரைக்கு ஆண்டுதோறும் வந்து ஒரு வாரம் தங்கிச் செல்வார். ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்துள்ள இவருக்கு மதுரை மிகவும் பிடித்துப் போனதற்குக் காரணம் மீனாட்சி திருக்கோயிலும் காரமான பாரம்பரிய அசைவ உணவு வகைகளுமாம். அவருடைய ஒரு வார மதுரைப் பயண தினசரி இப்படியாக இருக்கும். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து மீனாட்சி கோயிலுக்குச் சென்று சிலமணி நேரங்கள் செலவிடுவார். பின்பு சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஒரு சேரிப்பகுதியில் இயங்கும் ‘சீடு’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவன பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிப்பார். இதற்கிடையில் மதுரையின் மெஸ்களில் விரும்பியதை உண்டு மகிழ்வார். அவரிடம் உரையாடியபோது, அவர் ஒரு பாரம்பரிய கத்தோலிக்கக் கிறித்தவ குடும்பத்தில் பிறந்தவர். அப்படியானால் நீங்கள் இந்துமதக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டவரா? என்று கேட்டேன். ‘இல்லை எனக்குக் கோட்பாடுகள், சடங்குகளில் ஆர்வமில்லை. ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலையில் அமைதியாக அமர்ந்திருப்பது அற்புதமான ஆன்மீக அனுபவமாக இருக்கிறது. மனம் பெரும் ஆசுவாசம் கொள்கிறது. என் அன்றாட ஓட்டங்களிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு என்னைப் புதுப்பித்துக் கொள்வதாக உணர்கிறேன்’ என்றார்.
சுவிசர்லாந்து நாட்டின் ஆளரவமற்ற பசும் நிலக்காட்சிகளுக்கும் அமைதியான ஐரோப்பிய வாழ்க்கை முறைகளுக்கும் மாறான வெப்பமும் சந்தடியும் மிக்க, அதேநேரம் உயிரியக்கம் ததும்பும் மதுரையையும், அதிகாலை மீனாட்சி ஆலயத்தின் குளிர்ச்சியும் அதற்கேயுரிய விசித்திர மணமும் அந்த ஐரோப்பியருக்கு அந்த விவரிக்க இயலாத உணர்வை உண்டாக்கியிருக்கலாம். மொத்தத்தில் அவர் ஒரு ஆன்மிகமான மனிதர் என்று நான் புரிந்துகொண்டேன். கோயிலுக்குச் சென்றதனால் மட்டுமல்லாமல் தன்னுடைய நாட்டுக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் கிடைக்காத குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை உதவவேண்டும் என்ற அவரது மனப்பான்மையையும் இணைத்தே இப்படிக் கருதுகிறேன். வலிந்து ஊட்டப்படும் மத உணர்வும், பெருகிவரும் சடங்கு முறைகளும் உருவாக்கிவரும் அபத்தங்களை நினைக்கும் போது அச்ச உணர்வே மேலிடுகிறது.