ARTICLE AD BOX
கோடை வந்து விட்டாலே வேர்க்குரு வேனல் கட்டிகள் என்று சிலருக்கு வர ஆரம்பிக்கும். அதை ஆரம்பத்தில் இருந்து வரவிடாமல் தடுப்பதன் மூலம் சருமத்தை அழகாக பராமரிக்கலாம். அதற்கு கீழ்கண்ட குளியல்பொடி தயாரித்து வைத்துக்கொண்டால் நல்ல வசதியாக இருக்கும். குளியல் பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் இதோ:
வெட்டிவேர், சந்தன கட்டை, வசம்பு, ஏலரிசி, பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு, கோஷ்டம், தாளிசபத்திரி, பச்சிலை, ஜடாமஞ்சில் ,சிறுநாகப்பூ விலாமிச்சை வேர், கஸ்தூரி மஞ்சள். இவையெல்லா வற்றையும் ஒரு கிலோ அளவிற்கு வாங்கி காயவைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினசரி குளியல் சோப்புக்கு பதிலாக இதை தேய்த்து குளித்து வந்தால் சருமம் நல்ல பளபளப்பாக இருக்கும். கோடைக்கான சருமநோய் எதுவும் வராமல் தடுக்கும்.
மேலே கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதில் ஒரு சில மருந்துகள் கிடைக்கவில்லை என்றால் இருப்பதை வைத்து காயவைத்து அரைத்து பயன்படுத்தலாம்.
முகம் பொலிவு பெற
கோடை வந்து விட்டால் எண்ணெய் வடிந்து முகத்தின் அழகை சற்று குறைத்துக் காட்டும் இயல்பு வருவது உண்டு. அந்தக் குறையை போக்குவதற்கு ஒரு எளிமையான வழி
கிளிசரின், எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர், ஹைட்ரஜன் சைட் ஆகியவற்றை சம அளவு கால் டம்ளர் வீதம் எடுத்து நன்றாக கலந்து இரவில் தூங்கப்போவதற்கு முன் முகத்திலும், கழுத்திலும் லேசாக தடவிக் கொண்டு படுத்து, காலையில் கண் விழித்ததும் நன்றாக தேய்த்து கழுவிவிட வேண்டும். இது அழுக்கு கிருமிகளை போக்கி சுத்தப்படுத்துவதுடன் வறட்சியையும் போக்கி முகச்சருமம் மினுமினுப்பாக இருக்க உதவிபுரியும். எண்ணெய் வழியும் முக அமைப்பைக் கொண்டவர்களுக்கு இது நல்ல பொலிவைத்தரும்.
தலைக்கு ஏற்ற வாசனைப் பொடி
கஸ்தூரி மஞ்சள், வெட்டிவேர், கோரைக்கிழங்கு, சாம்பிராணி, விலாமிச்சை வேர், இவை ஒவ்வொன்றிலும் ஒரு டம்ளர் எடுத்து எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் 2 டம்ளர் சீயக்காய், இரண்டு டம்ளர் பாசிப்பயறு கலந்து நன்றாக காயவைத்து நைசாக அரைத்து வைத்துக் கொண்டு தலை மற்றும் உடம்புக்கும் பயன்படுத்தலாம். சருமம் வறண்டு போகாமல் பளபளப்பாக இருக்கும். தலையிலும் வேர்வை நாற்றம் வீசாது. உடம்பிலும் நல்ல வாசனை வருவதை உணரலாம். வேர்வை வாசனை அறவே இல்லாமல் இருப்பதற்கு இதுபோன்ற குளியல் பொடிகளை பயன்படுத்தி கோடையை சமாளிக்கலாம்.