ARTICLE AD BOX
வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரிப்பாலும் கோடை காலம் தொடங்கும் முன்னே மூல வைகை ஆறு வறண்டு கிடக்கிறது. இதனால், பாசனத்திற்கும், பொதுமக்களின் குடிநீர் விநியோகத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், வருசநாடு, காந்திகிராமம், நொச்சி ஓடை மலைப் பகுதிகளில் மழை காலங்களில் உருவாகும் சிறிய நீரோடைகள் ஒன்றிணைந்து, மூல வைகை ஆறாக உருவாகி, ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் சேர்கிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்குப் பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைப் பொழிவு இருந்ததால் பலமுறை மூலவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வந்த பின்பு கடந்த 2 மாதங்களில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையில்லை. இதனால் மூலவைகை ஆற்றில் நீர் வரத்து படிப்படியாகக் குறைந்து இருவாரங்களுக்கு முன்பு சிற்றோடையாகக் காட்சியளித்தது. இந்த நிலையில், கடந்த வாரத்தில் தேனி மாவட்டத்தில் வெயில் அதிகரித்ததால் தற்போது மூலவைகை ஆற்றுப் பகுதி நீரோட்டம் இன்றி வறண்ட நிலையில் காணப்படுகிறது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் முக்கிய நீர்வரத்து ஆறாகவும், 100க்கும் மேற்பட்ட கிராம மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் மூலவைகை ஆறு உள்ளது. மூலவைகை ஆற்றினை ஒட்டி வாலிப்பாறை, முருக்கோடை, தும்மக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், குன்னூர் என வரிசையாக மலைகிராமங்கள் உள்ளன.
இவற்றின் வழியாக மூலவைகையில் செல்லும் தண்ணீர் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியை சென்றடைகிறது. இந்த கிராமங்களுக்கு மூலவைகை ஆற்றில் பல்வேறு பகுதிகளில் உறை கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கோடைகாலம் தொடங்கும் முன்னரே, மூல வைகை ஆறு வறண்டு காணப்படுவதால் பாசனம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் என்பதாலும், நீர்வரத்து இல்லாமல் வைகை அணை நீர்மட்டம் குறையும் என்பதாலும் 5 மாவட்ட விவசாயிகளும் கவலையில் உள்ளனர்.
The post கோடைக்கு முன்னே வறண்டது மூல வைகை: பாசனம், குடிநீருக்கு சிக்கல் appeared first on Dinakaran.