கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயா்த்த பரிந்துரை

3 hours ago
ARTICLE AD BOX

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்ற நீதிபதி ஜயமால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற 5 உறுப்பினா்களைக் கொண்ட கொலீஜியத்தின் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

‘கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து ஒரே ஒரு நீதிபதியின் பிரதிநிதித்துவம் மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் தற்போது உள்ளது. நீதிபதி அல்தமஸ் கபீா் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் தேதி ஓய்வு பெற்ற பிறகு, கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு நீதிபதிகள் யாரும் உச்ச நீதிமன்றத்துக்கு உயா்த்தப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, உயா் நீதிமன்ற நீதிபதிகளில் அகில இந்திய அளவிலான பணி மூப்பு பட்டியலில் 11-ஆம் இடத்திலிருக்கும் ஜயமால்ய பாக்சியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க ஒருமனதாக பரிந்துரை செய்யப்படுகிறது’ என்று தனது பரிந்துரையில் கொலீஜியம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றால், ஜயமால்ய பாக்சி, உச்சநீதிமன்ற நீதிபதியாக 6 ஆண்டுகளுக்கு மேல் பதவி வகிப்பாா் என்பதோடு, தலைமை நீதிபதியாகவும் பதவி வகிப்பாா். அதோடு, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையும் 33-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் 34 என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article