ARTICLE AD BOX
திருவனந்தபுரம்: கொச்சியில் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளராக பணிபுரிந்து வந்தவர் மனீஷ் விஜய்(42). இவரது சொந்த ஊர் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி ஆகும். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கொச்சி காக்கநாடு பகுதியில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் மனீஷ் விஜய்யின் தாய் சகுந்தலா அகர்வால் (80) மற்றும் அக்கா ஷாலினி விஜய்(45) ஆகியோர் கொச்சி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு வார விடுமுறையில் ஊருக்கு செல்வதாக மனீஷ் விஜய் அலுவலகத்தில் கூறியிருந்தார். ஆனால் விடுமுறை முடிந்த பின்னும் மனீஷ் விஜய் அலுவலகத்திற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் நேற்று இரவு மனீஷின் குடியிருப்புக்கு சென்று பார்த்தபோது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து காக்கநாடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து திறந்து பார்த்தபோது மனீஷ் விஜய் ஒரு அறையிலும், அக்கா ஷாலினி விஜய் வேறொரு அறையிலும் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டனர்.
இன்னொரு அறையில் கட்டிலில் போர்த்தப்பட்ட நிலையில் தாய் சகுந்தலா அகர்வாலின் உடல் காணப்பட்டது. அவரது உடலின் மேல் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. மூன்று உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டன. இதனால் அவர்கள் இறந்து 5 அல்லது 6 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.தொடர்ந்து உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
*மரணத்தில் மர்மம் நீடிப்பு
ஷாலினி விஜய் கடந்த 2006ம் ஆண்டு ஜார்கண்ட் மாநில அரசு தேர்வாணைய தேர்வில் முதல் ரேங்கில் வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தத் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக முதலில் போலீசாரும், பின்னர் சிபிஐயும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதனால் ஷாலினி விஜய் உள்பட சிலர் அரசு வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஊருக்கு செல்வதற்காகத் தான் மனீஷ் விஜய் விடுமுறை எடுத்திருந்தார். இந்த விவகாரத்தால் ஏற்பட்ட மன வேதனையால் 3 பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கொச்சியில் பூட்டிய வீட்டுக்குள் சுங்கத்துறை கூடுதல் ஆணையாளர், தாய், தங்கை சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.