ARTICLE AD BOX
கோவை பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை (11 மணிக்கு) திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான
வானதி சீனிவாசன், பாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரன், மற்றும் பாஜக மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அலுவலக திறப்பு விழாவினை அடுத்து பாஜக நிர்வாகிகளோடு அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெள்ளியங்கிரி பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று மாலை (6 மணிக்கு) நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
இந்நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு அமித்ஷா கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு பாஜகவினர் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் ஐந்தாயிறத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஈஷா யோகா மையம் முழுவதும் காவல்துறையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி உள்துறை அமைச்சர் தங்கியுள்ள ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ள நிலையில் இங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு துறையினரும் மாநகர காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
11 மணி அளவில் அமித்ஷா இங்கிருந்து புறப்பட்டு பீளமேடு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிலையில் இந்த ஹோட்டலுக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.