ARTICLE AD BOX
மூணாறு,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படிக்கும் 34 மாணவ-மாணவிகள் மற்றும் 3 பேராசிரியர்கள் என 37 பேர் ஒரு பஸ்சில் நேற்று காலை கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். மூணாறில் உள்ள சுற்றுலா இடங்களை பார்த்த பிறகு மூணாறு அருகே வட்டவடை பகுதிக்கு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.
மூணாறு மலைப்பாதையில், எக்கோ பாயிண்ட் பகுதியில் சுற்றுலா பஸ் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சின் முன்பக்க, பின்பக்க கண்ணாடிகளையும், ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து பஸ்சுக்குள் சிக்கியவர்களை போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் மீட்டனர். இருப்பினும் பஸ்சின் இடிபாடுகளில் சிக்கி ரமேஷ் மகள் வேனிகா (வயது 19), ராமு மகள் ஆத்திகா (18) ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும் இந்த விபத்தில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட 35 பேர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக மூணாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதன் (19) என்ற மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.