ARTICLE AD BOX
“தொடர் தோல்விகளுக்குக் காரணம் ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்தான் பதில் சொல்லவேண்டும்” என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்குப் பின் அதிமுகவில் நடந்த அரசியல் சூது, சூழ்ச்சி, வஞ்சனை அரங்கேற்றப்பட்டது. அதற்குப் பின் ஊரக உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும், சட்டமன்ற, மக்களவை என எந்தத் தேர்தலாக இருந்தாலும் கழகம் தோல்வியைத்தான் சந்தித்துள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் ஒற்றைத் தலைமைதான் வேண்டுமென அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்தான் பதில் சொல்லவேண்டும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றோர் இருமொழிக்கொள்கைதான் என்பதில் உறுதியாக இருந்தனர். நான் முதலமைச்சராக இருந்தபோதும் - சட்டமன்றத்தில் - என் நிலைப்பாடும் இருமொழிக்கொள்கைதான் என்பதைச் சொல்லிவிட்டேன். தொண்டர்கள் மத்தியில் கழகம் ஒன்றிணைய வேண்டுமென்பதுதான் எண்ணமாக இருக்கிறது. தொண்டர்கள் எண்ணம் ஈடேற வேண்டுமென்றுதான் நாங்கள் தர்மயுத்தத்தினை நடத்திக்கொண்டு இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.