ARTICLE AD BOX
தமிழகத்தில் திமுக மற்றும் பாஜக இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் மத்திய அரசு நிதியை நிறுத்தியதால், 'கெட் அவுட் மோடி' ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இதற்கு பதிலடியாக அண்ணாமலை 'கெட் அவுட் ஸ்டாலின்' என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாஜகவிற்கும் தினந்தோறும் மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், திமுக அரசின் திட்டங்களை அண்ணாமலை விமர்சித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்களை விமர்சித்து சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தமிழக கல்வி திட்டங்களுக்கு வர வேண்டிய 2000 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக மத்திய பாஜக அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை முன்வைக்கும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதியை விடுவிப்போம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சாகு கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி, "தமிழகத்தின் உரிமைகளை பறிக்க முயன்றபோது, கடந்த முறை தமிழக மக்கள் Go Back Modi என்று சொல்லி துரத்தினார்கள்.

மீண்டும் இதே போல தமிழ்நாட்டு மக்களிடம் முயற்சி செய்தால் Go Back Modi என்று சொல்வதற்கு பதிலாக 'Get Out Modi' என்று கூறி துரத்துவார்கள் என ஆவேசமாக தெரிவித்திருந்தார். இதற்கு அண்ணாமலையும் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய போது, ‘நீ சரியான ஆளாக இருந்தால் ‘கெட் அவுட் மோடி’ என்று சொல்லு, பார்க்கலாம்’’ என்று சவால் விட்டு பேசியிருந்தார். . இந்த நிலையில் நேற்று எக்ஸ் வலைதளத்தில் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.

இதனால் ‘கெட் அவுட் மோடி’ என்ற ஹேஸ்டேக் தற்போது இந்திய அளவில் முதல் இடத்திலும் உலக அளவில் 2வது இடத்திலும் டிரெண்டானது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, "நாளை காலை நான் Get Out Stalin என ட்வீட் பதிவிட போகிறேன். அது எவ்வளவு போகப்போகிறது என்று நீங்களே பாருங்கள்" என மீண்டும் அண்ணாமலை சவால் விட்டிருந்தார். இதனையடுத்து இன்று காலை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற வாசகத்தை பதிவு செய்துள்ளார். அந்த வாசகம் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

இதற்கு போட்டியாக மீண்டும் திமுகவினர் Get Out modi வாசகத்தை பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மக்களுக்கு தேவையான திட்டங்களை போட்டி போட்டு மத்திய மற்றும் மாநில கட்சிகள் செயல்படுத்தாமல் ஒருவருக்கொருவர் இணையதளத்தில் கெட் அவுட் மோடி.. கெட் அவுட் ஸ்டாலின்.! என ட்ரெண்ட் ஆக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்