ARTICLE AD BOX
குற்றப்பரம்பரை நாவலைத் தழுவி சசிகுமார் இயக்கும் புதிய வெப் தொடரின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சசிகுமார். அந்த வகையில் இவர் தற்போது டூரிஸ்ட் ஃபேமிலி, மை லார்ட் ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் சில படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருகிறார் சசிகுமார். அதற்கு முன்பாக கடந்த 2008இல் இவரது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து இவர் இயக்கிய ஈசன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே சசிகுமார் நடிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சசிகுமார், வேலராம மூர்த்தியின் குற்றப்பரம்பரை எனும் நாவலை தழுவி வெப் தொடர் ஒன்றை இயக்கப் போவதாக தகவல் வெளியானது. அதன்படி இந்த வெப் தொடரில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ், ராணா, அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் சசிகுமார் மீண்டும் இயக்குனராக மாற உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் குற்றப்பரம்பரை நாவல் படமாக உருவாக்க போகிறது என பாலா, பாரதிராஜா ஆகியோரால் அறிவிக்கப்பட்டு கைவிடப்பட்டது. அதேபோல் சசிகுமாரின் எந்த வெப் தொடரும் அடுத்த கட்டத்திற்கு நகராத காரணத்தினால் மூன்றாவது முறையாக கைவிடப்பட்டதாகவும் பல செய்திகள் பரவியது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, 2025 செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பை சசிகுமார் தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பப்படுகிறது.