ARTICLE AD BOX
சென்னை,
மக்களின் அன்றாட செலவுகளில், மருத்துவத்துக்காக அதிக தொகை செலவாகிறது. ஏழை-எளிய, நடுத்தர குடும்பங்களின் மருத்துவ செலவை குறைக்க மத்திய அரசின் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு பிரதமரின் 'ஜன்அவுஷாதி பரியோஜனா' என்ற மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட்டன. 'ஜெனரிக்' மருந்துகளை 50 முதல் 90 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கிக்கொள்ளும் வகையில் இந்த மருந்தகங்கள் நாடு முழுவதும் இயங்குகின்றன. 'ஜெனரிக்' மருந்துகள் என்பது சாதாரண மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகளில் இருக்கும் மூலக்கூறுகளையே கொண்டதாகும். ஆனால் அந்த மருந்துகளுக்கு ஒரு பிராண்ட் (கம்பெனி) பெயர்கள் உண்டு.
பிரபல மருந்து கம்பெனிகளால் தயாரிக்கப்படும் அந்த மருந்துகள் நன்றாக 'பேக்' செய்யப்பட்டிருக்கும். அதன் உறைகள், பாட்டில்களில் நிறுவனத்தின் பெயர், அதில் என்னென்ன மருந்து பொருட்கள் எவ்வளவு அளவில் சேர்க்கப்பட்டு இருக்கிறது? தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி என்று எல்லா விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால்தான் அதற்கு விலை அதிகம். நாடு முழுவதும் மத்திய அரசின் மலிவு விலை மருந்தகங்கள் 15,057 செயல்பாட்டில் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 1,363 இருக்கிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.
கடந்த சுதந்திர தினத்தன்று தேசிய கொடியேற்றி வைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "பொதுப்பெயர் வகை (ஜெனரிக்) மருந்துகளும், பிற மருந்துகளும் நடுத்தர மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்வர் மருந்தகம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். முதல் கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்படும். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த மருந்தாளுனர்களுக்கும், கூட்டுறவு அமைப்புகளுக்கும் தேவையான கடனுதவியோடு ரூ.3 லட்சம் மானியமாக அரசால் வழங்கப்படும்" என்ற நல்ல அறிவிப்பை வெளியிட்டார். இதற்காக விண்ணப்பித்த 840 கடைகள் உள்பட கூட்டுறவு கடைகளையும் சேர்த்து ஆயிரம் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி திறந்து வைக்கிறார்.
முதல்வர் மருந்தகங்களில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகள் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்படும். இதுதவிர மருத்துவம் சார்ந்த இதர உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்ப்காப்ஸ் மற்றும் யுனானி மருந்துகள் உள்பட மற்ற மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தால் கொள்முதல் செய்யப்பட்டு, வழங்கப்பட உள்ளது.
மத்திய அரசாங்கத்தின் மலிவு விலை மருந்தகத்துக்கும், முதல்வர் மருந்தகத்துக்கும் என்ன வித்தியாசம்? என்று ஒரு தமிழக அரசு அதிகாரியிடம் கேட்டபோது, "முதல்வர் மருந்தகங்களில் 200 வகையான ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள் கிடைக்கும். மத்திய அரசின் மருந்தகங்களைவிட, முதல்வர் மருந்தகங்களில் மருந்துகளின் விலை 10 சதவீதம் குறைவாக இருக்கும். பிராண்டட் மருந்துகள் என்று கூறப்படும் கம்பெனி மருந்துகளின் விலையும் குறைவாக இருக்கும்" என்றார். இந்த கடைகள் 'டி-பார்ம்' அல்லது 'பி-பார்ம்' படித்தவர்களின் கடைகளாகவோ அல்லது அவர்கள் வேலைபார்க்கும் கடைகளாகவோ இருக்கும். டாக்டர்கள் எழுதிக்கொடுக்கும் மருந்துகளுக்கு சிறந்த மாற்று மருந்துகள் எது? என்பது அவர்களுக்கு தெரியும். மருந்து வாங்க வருபவர்களிடம் அந்த மருந்துகளை எப்படி? எப்போது சாப்பிடவேண்டும்? என்ற ஆலோசனைகளையும் கூறுவார்கள். தரத்தில் குறை இல்லாமல், குறைந்த விலையில் மருந்துகளை விற்கும் முதல்வர் மருந்தகங்கள் பரவலாக கிராமங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் திறக்கப்படுவது மக்களுக்கு நிச்சயமாக நல்ல பலனை அளிக்கும்.