வேறொரு பெண்ணுடனான திருமணம் தாண்டி உறவால் மனைவியை கொலை செய்துவிட்டு அதை மறைக்க நாடகமாடிய கணவரை 48 மணி நேரத்தில் கைது செய்துள்ளது உத்தரப் பிரதேச போலீஸ். மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் கும்பமேளாவில் காணாம போனதாக பிள்ளைகளிடம் சொன்ன பொய் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கணவர் போட்ட சதி திட்டம்:

டெல்லி திரிலோகபுரியை சேர்ந்தவர் அசோக் குமார். இவரது மனைவி மீனாட்சி. வேறொரு பெண்ணுடன் அசோக் குமார், திருமணத்தை தாண்டிய உறவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தனது மனைவியை கொலை செய்துவிட்டு, வேறொரு பெண்ணுடன் இருப்பதற்காக இவர் சதி திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி, மகா கும்பமேளாவிற்கு செல்வதாக கூறி, தனது மனைவி மீனாட்சியுடன் அசோக் டெல்லியில் இருந்து புறப்பட்டுள்ளார். அதற்கு மறுநாள், ஜுன்சிக்கு சென்ற இருவரும் அறையில் தங்கியுள்ளனர். இரவில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

மீனாட்சி குளியலறைக்குள் சென்றதும், அசோக் அந்த தருணத்தைப் பயன்படுத்தி, அவரின் பின்னால் இருந்து தாக்கி, கத்தியால் அவர் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். பின்னர், தனது ரத்தக் கறை படிந்த ஆடைகளை மாற்றி, கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதத்தை அவற்றில் சுற்றி, ஆதாரங்களை அப்புறப்படுத்தி இருக்கிறார்.

நடந்தது என்ன?

பின்னர், தனது மகன் ஆஷிஷை அழைத்து, மீனாட்சி கூட்ட நெரிசலில் காணாமல் போனதாக பொய் கூறினார். தான் சோகமாக இருப்பல் போல் நடித்துள்ளார். மனைவியை தேடியதாகவும், ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தனது மகனிடம் கூறி இருக்கிறார்.

தந்தையின் விளக்கத்தில் சந்தேகமடைந்த மீனாட்சியின் மகன் ஆஷிஷ், தாயை கண்டுபிடிக்க தானே களத்தில் இறங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி, மீனாட்சியின் குடும்பத்தினர் தங்கள் தாயின் புகைப்படத்துடன் கும்பமேளாவிற்கு வந்து அவரைத் தேடத் தொடங்கினர்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி காலை, பிரயாக்ராஜ் காவல்துறைக்கு விடுதியின் குளியலறையில் 40 வயது பெண்ணின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தை அடைந்த போலீசார், அந்தப் பெண்ணின் கழுத்து கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில், அந்தப் பெண் பிப்ரவரி 18 ஆம் தேதி இரவு டெல்லியில் இருந்து பிரயாக்ராஜுக்கு தனது கணவருடன் பயணம் செய்திருப்பது தெரியவந்தது. அந்தப் பெண்ணின் புகைப்படம் சமூக ஊடக தளங்களில் பரவலாகப் பரப்பப்பட்டு செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது. கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி, அந்தப் பெண்ணின் உறவினர்கள் அவரை அடையாளம் கண்டனர்.