ARTICLE AD BOX
செங்கல்பட்டு அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற குமுதம் நிறுவன ஒளிப்பதிவாளர் இளங்கோ, அக்கட்சியின் பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து மன்றத்தின் தலைவர் கே. தங்கராஜ் மற்றும் செயலாளர் எஸ். ஐஸ்வர்யா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்ட பின்னர், சிலர் பேசும் பேச்சுகளுக்கும், அவர்களின் செய்கைகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்று குறிப்பிட்டு உள்ளனர்.
மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில், செய்தியாளர்களுக்கு சரியான ஒருங்கிணைப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், மத்திய அரசின் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தும், தனியார் பாதுகாவலர்களை அரண்களாக நியமித்து இருந்தது கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், பாதுகாவலர்கள் செய்தியாளர்களை நெருங்க விடாமல் தள்ளிவிட்டதில், ஒளிப்பதிவாளர் இளங்கோ நிலைகுலைந்து தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு அரசியல் கட்சியின் நிகழ்வில் இது போன்ற நிகழ்வுகள் சாதாரணமானது என்று கடந்து விட முடியாது.
செய்தியாளர்களை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கும் வகையிலான செயல்பாடுகளையும் செய்ய முடியாத ஒரு அமைப்பு எதற்காக செய்தியாளர்களை அழைக்க வேண்டும்? என்று மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
சம்பவம் நடந்து 8 மணி நேரம் கடந்த பின்னரும் கூட, தமிழக வெற்றிக் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள், தாக்குதலுக்கு காரணமான பாதுகாவலர்கள் பத்திரிகையாளர் மீதான இந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தி உள்ளது.
அடுத்து வரக் கூடிய நிகழ்வுகளில் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாத வண்ணம் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் மன்றம் கேட்டுக்கொண்டு உள்ளது.
பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்