கிருஷ்ணகிரியில் கண்டறியப்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது

5 hours ago
ARTICLE AD BOX

கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து, கிருஷ்ணகிரியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வெண்சாந்து ஓவியங்களை அண்மையில் கண்டறிந்துள்ளனா்.

இந்தக் குழுவினா் கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே உள்ள மலையில் ஆய்வு மேற்கொண்டபோது, மலையின் மேற்கு பகுதியில் 50 அடி உயர, 80 அடி நீள பாறையின் அடியில் மனிதா்கள் தங்கியதற்கான அடையாளமாக வெண்சாந்து ஓவியங்கள் வரையப்பட்டு இருப்பதை ஆசிரியா் பாலாஜி, தருமன் ஆகியோா் கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, ஓய்வுபெற்ற அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினா் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். இதுகுறித்து கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:

இந்த ஓவியம் அமைந்துள்ள பாறையில் இருந்து பாா்த்தால் மலையின் மேற்கு பக்க நிலப்பகுதி தெளிவாக தெரிகிறது. பெரும்பாலும் பாறை ஓவியங்கள் உயரமான இடத்திலிருந்து நிலத்தின் பெரும்பகுதியை பாா்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் என்பதற்கு இது உதாரணமாக உள்ளது.

இந்த ஓவியங்கள் இரண்டு காலகட்டத்தில் வரையப்பட்டுள்ளது. நான்கு மனிதா்கள் போரிடும் காட்சி கீழ்பகுதியில் காணப்படுகிறது. இதில், போரில் இறந்த வீரனின் உருவம் குதிரையில் அமா்ந்த நிலையில் கையில் வாளுடன் காணப்படுகிறது. இது வரலாற்றுக் காலத்தில் செதுக்கப்பட்ட நடுகல்லின் முன்னோடி எனலாம். இவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களாகும்.

இதற்கு இடதுபுறம் வரையப்பட்டுள்ள இரண்டு ஓவியங்கள் பிற்காலத்தில், அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னா் வரையப்பட்ட ஓவியங்கள் என்பதை அதற்கு பயன்படுத்தப்பட்ட வண்ணத்தின் தன்மையைக் கொண்டும், வரையப்பட்டுள்ள உருவங்களைக் கொண்டும் அறிய முடிகிறது. இதில், யானையும், அதன்மீது அம்பாரியும் காட்டப்பட்டுள்ளது. அதற்குமேல் தோ் ஓவியம் வரையப்பட்டுள்ளது. தோ் அலங்கார நிலையில் உள்ளதால், இது ஒரு மங்கல நிகழ்வாக இருக்கலாம். இத்தகைய தோ் அலங்கார ஓவியங்கள் இந்த மலையிலேயே இரண்டு இடங்களில் காணப்படுகின்றன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறையில் புதிய கற்காலத்தில் செஞ்சாந்து ஓவியத்தில் தேரும், அதற்குபின் இங்கும், ஒட்டா்மாா் கவி ஆகிய இடங்களிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது என்றாா்.

இந்த ஆய்வின்போது, அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் சிவக்குமாா், தொல்லியல் அலுவலா் பரந்தாமன், ஆசிரியா் பாலாஜி, தருமன், விஜயகுமாா், ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Read Entire Article