ARTICLE AD BOX
ஐபிஎல் தொடருக்கான கிரிக்கெட் பந்தில் உமிழ்நீரைப் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதியளித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் முதல் போட்டி வருகிற 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்கவிருக்கிறது. முதல் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 2022 ஆம் ஆண்டு கிரிக்கெட் பந்தை வழவழப்பாக்குவதற்காக உமிழ்நீர் பயன்படுத்துவதை நிரந்தரமாக தடைசெய்வதாக சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இதற்கு முதலில் எதிர்ப்புகள் எழுந்தாலும் பின்னர் நடைமுறையாக்கப்பட்டது.
இதையும் படிக்க: ராஜஸ்தான் அணிக்கு கேப்டனான ரியான் பராக்..! பேட்டராக தொடரும் சஞ்சு சாம்சன்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்கு கடினமாக உள்ளதாகவும், அதனால், மீண்டு இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அவருக்கு டிம் சௌதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று மும்பையில் கேப்டன்களுடன் நடந்த கூட்டத்தில் இந்த தடையை நீக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி ஐசிசிக்கு தொடர்பில்லாதது என்பதால் இந்த முடிவுக்கு அனைத்து கேப்டன்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக, முதல் முறை உமிழ்நீர் பயன்படுத்தினால், கேப்டனுக்கு எச்சரிக்கையும், இரண்டாவது முறை பயன்படுத்தினால் 2-வது மற்றும் இறுதி எச்சரிக்கையும், மூன்றாவது முறை பயன்படுத்தினால் வீரருக்கு 10 லட்சம் அல்லது போட்டிக் கட்டணத்தில் 25 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படும் என்ற விதி இருந்தது. இது தற்போது நீக்கப்பட்டுள்ளதால் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபி வெற்றி: இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகை!