காஸாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் - 330 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

21 hours ago
ARTICLE AD BOX

காஸாவில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் - 330 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா, போர் நிறுத்தம், ஹமாஸ்
  • எழுதியவர், ருஷ்டி அபுலோஃப் மற்றும் ஜார்ஜ் ரைட்
  • பதவி, பிபிசி
  • 4 நிமிடங்களுக்கு முன்னர்

காஸா முனையில் மீண்டும் விரிவான தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாஸ் அமைப்பால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவலின் படி 330 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்புக்கு சொந்தமான பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து தாக்குவதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன.

காஸாவின் உள்துறை துணை அமைச்சரான மொகமத் அபு வஃபா இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர் அந்த பிராந்தியத்தில், ஹமாஸின் உயர்நிலை பாதுகாப்பு அதிகாரியாக கருதப்படுகிறார்.

ஜனவரி 19-ஆம் தேதி காஸாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னர் நடைபெறும் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இதுவாகும். காஸா போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் ஒருமித்த கருத்தை எட்டுவதில் தோல்வியடைந்து விட்டன.

அதிகாலை உணவு வேளையில் குண்டு வீச்சு

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா, போர் நிறுத்தம், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்ச் 15-ஆம் தேதி காஸாவில் நடந்த கூட்டு இஃப்தார்

காஸாவில் தாக்குதல் தொடங்கியது ரமலான் மாதத்தின் அதிகாலை என்பதால், பெரும்பாலானவர்கள் தங்களின் அதிகாலை உணவை எடுத்துக் கொண்டிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

20க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மேலே பறந்து சென்றதாகவும், காஸா சிட்டி, ரஃபா, கான் யூனுஸ் உள்ளிட்ட பகுதிகளில் இலக்குகளை இந்த விமானங்கள் தாக்கியதாகவும் அவர்கள் கூறினர்.

இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலையில் இந்த தாக்குதலுக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் தொடர்ந்து மறுத்து வருவதாலும், அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் பேச்சுவார்த்தைக் குழு முன்வைத்த கோரிக்கைகளை மறுத்ததாலும், இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது" என அந்த அறிக்கை கூறுகிறது.

"இப்போதிருந்து ஹமாசுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் அதிகரித்துக் கொண்டே இருக்கும்" எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான திட்டம் இஸ்ரேல் பாதுகாப்புப் படையால் (IDF) தயாரிக்கப்பட்டு , அரசியல் தலைவர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றும அந்த அறிக்கை கூறுகிறது.

"அமெரிக்காவுடன் ஆலோசிக்கப்பட்டது"

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா, போர் நிறுத்தம், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தாக்குதலுக்கு முன்னதாக டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் ஆலோசித்ததாக கூறப்பட்டுள்ளது

"எங்கள் எதிரிகளுக்கு கருணை காட்ட மாட்டோம்" என கூறியுள்ள ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் டேன்னி டானோன், அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று ஹமாசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு ஆவேசமாக பதிலளித்துள்ள ஹமாஸ், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதன் மூலம் இஸ்ரேல் துரோகம் செய்துவிட்டதாக கூறியுள்ளது. எஞ்சியுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விதியை நிச்சயமற்றதாக இஸ்ரேல் மாற்றி விட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

ஆனால் பதில் தாக்குதலை தொடங்குவதாக ஹமாஸ் எதுவும் கூறவில்லை, மாறாக பேச்சுவார்த்தைக் குழு மற்றும் ஐக்கிய நாடுகள் அவை தலையிட வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் இஸ்ரேல் கலந்தாலோசித்ததாக வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸ்-க்கு தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்த நீட்டிப்பு முயற்சி தோல்வி

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா, போர் நிறுத்தம், ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காஸாவில் உணவு, குடிநீர், சுகாதார வசதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளது

தற்காலிக போர் நிறுத்தத்திற்கான முதற்கட்டம் மார்ச் 1-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், இதனை மேலும் நீட்டிப்பதற்கான முயற்சிகளில் பேச்சுவார்த்தைக்குழுவினர் ஈடுபட்டனர்.

முதல் கட்ட போர் நிறுத்தத்தை ஏப்ரல் நடுப்பகுதி வரை நீட்டிக்கலாம் என்று பரிந்துரைத்த அமெரிக்கா, இதன் ஒரு பகுதியாக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கலாம் மற்றும் பாலத்தீன சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும் என முன்மொழிந்தது.

ஆனால் அமெரிக்க தூதர் விட்காஃப் நடத்திய இந்த மறைமுக பேச்சுவார்த்தை குறித்து அறிந்த பாலத்தீன அதிகாரிகள் பிபிசியிடம் பேசிய போது, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பிற்குமே சில அம்சங்களில் உடன்பாடு இல்லை என தெரிவித்தனர்.

இஸ்ரேல் - பாலத்தீனம், காஸா, போர் நிறுத்தம், ஹமாஸ்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஸாவில் அடிப்படை வசதிகள் இல்லை

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் 1,200க்கும் மேற்பட்டோரை கொன்ற ஹமாஸ் 251 பேரை பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றதையடுத்து இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியது.

ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சக தகவலின் படி, இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் இதுவரை 48,520க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். இந்த தகவலையே ஐ.நா. மற்றும் பிற அமைப்புகளும் பயன்படுத்துகின்றன.

காஸாவின் சுமார் 21 லட்சம் மக்கள் தொகையும் பல முறை ஒட்டுமொத்தமாக இடமாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

காஸாவில் 70 சதவிகித கட்டடங்கள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. மருத்துவ வசதி, குடிநீர், சுகாதார அமைப்புகள் முழுமையாக சீர்குலைந்து விட்டன. உணவு, எரிபொருள், மருந்துகள், தங்குமிடம் ஆகியவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)

Read Entire Article