ARTICLE AD BOX

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படுவதாகவும், முன்னுக்குப்பின் முரணான கருத்துகளைக் கூறி வருவதாகவும் தெரிவித்து முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர். நேற்று(பிப். 24) நாம் தமிழர் கட்சியின் பெண்கள் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு முன்னதாக, நாதக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அத்துடன் சீமான், நாதகவை வீழ்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தற்போது கட்சியிலிருந்து விலகும் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் பாவேந்தன், 2019 ஆம் ஆண்டு அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 29 ஆயிரத்து 347 வாக்குகளைப் பெற்றவர். 2021 ஆம் ஆண்டு சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு 9656 வாக்குகளைப் பெற்றவர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்தில் இன்று தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொள்ள வருகை தர உள்ள நிலையில், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விலகியுள்ளது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post காளியம்மாளை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியில் இருந்து மற்றொரு முக்கிய நிர்வாகியும் விலகல்…! appeared first on Rockfort Times.