ARTICLE AD BOX
திருவள்ளூர்: சென்னை, குமணன்சாவடி துளசிதாசன் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (49). இவர் நேற்றுமுன்தினம் தன் மனைவி சுப்புலட்சுமி (43) மற்றும் உறவினர்களான ஜோதி (51), ஜித்தேஷ் (9) தேவராஜ் (77) ஆகியோருடன் ஆந்திர மாநிலம் சித்தூருக்குச் சென்றார். பின்னர் இவர்கள் அனைவரும் சித்தூரில் இருந்து காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை கோபிகிருஷ்ணன் ஓட்டிச் சென்றார்.
அந்தக் கார் திருத்தணியிலிருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்றபோது பட்டரைபெரும்புதூர் அருகே எதிர்பாராத விதமாக எதிரே திருத்தணி நோக்கி வந்த மற்றொரு கார் மீது மோதியது. இதில் அந்த காரில் இருந்த 5 பேரும், எதிரே வந்த காரில் இருந்த திருத்தணி தாலுகா, பூணிமாங்காடு பகுதியைச் சேர்ந்த சாய்கணேஷ் (39), ரக்சா (8) உள்ளிட்ட 7 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 கார்களும் நொறுங்கியது.
அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் விபத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, காயம் அடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த 6 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.
The post கார்கள் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, 6 பேர் காயம் appeared first on Dinakaran.