கர்நாடக மாநிலம், மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமையன்று, கன்னட அமைப்புகள் நடத்தி வரும் 12 மணி நேர முழு அடைப்பால், மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதித்து, தலைநகரமான பெங்களூரின் பரபரப்பான பகுதிகள் அனைத்தும் ஸ்தம்பித்துள்ளது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்ற இந்த முழு அடைப்பு போராட்டம் நடக்க முக்கிய காரணம், அண்டை மாநிலமான மகாராஷ்டிராவின் பெலகாவி பகுதியில் கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழக (KSRTC) ஓட்டுநர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தின் எதிரொலியாக இது நடந்துள்ளது.

வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்பட்டது. கர்நாடக ஓட்டுநருக்கு மராத்தி மொழி தெரியாததால் அவர் தாக்கப்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டது. கர்நாடக வடக்கு எல்லையில் அவ்வப்போது மராத்தி - கன்னட மொழி தொடர்பான பிரச்சனை வெடிக்கும் ஆனால் தற்போது தாக்குதல் சம்பவம் மற்றும் முழு அடைப்பு போராட்டம் ஆகியவை பெறும் சுமையாக மாறியுள்ளது.
பெங்களூரு மாநகரம், எப்போதும் பரபரப்பாக காணப்படும் நிலையில், இந்த முழு அடைப்பு போராட்டத்தின் தாக்கம் மக்களின் பரபரப்பு வாழ்க்கையை மொத்தமாக முடக்கியுள்ளது. சாலைகளும் பொது இடங்களும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.
இருப்பினும், கர்நாடகா மாநிலம் முழுவதும் இந்த முழு அடைப்பு போராட்டத்தின் தாக்கம் ஒரே மாதிரியாக இல்லை. சில பகுதிகளில் வழக்கமான செயல்பாடுகள் தொடர்ந்து வருகிறது, குறிப்பாக மைய பகுதிகளுக்குத் தொலைவில் இருக்கும் உட்பகுதிகள் முழுமையாக இயங்கி வருகிறது.
ஆனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இன்று மூடப்பட்டு உள்ளது. மேலும் தும்கூர் மற்றும் பெலகாவி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன, போராட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும், மகாராஷ்டிராவில் இருந்து வந்த போக்குவரத்து பேருந்துகள் கர்நாடக மாநில எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் இந்த போராட்டத்தின் வீரியம் சற்று அதிகமாகவே உள்ளது. பெங்களூரு முழு அடைப்பு போராட்டத்தின் போது எந்தெந்த சேவைகள் இயங்கும், எவை இயங்காது..?
இயங்காத சேவைகள்:
- BMTC மற்றும் KSRTC பேருந்து சேவைகள் தடைபடலாம்.
- சில தனியார் டாக்ஸி மற்றும் ஆட்டோ ரிக்ஷா சேவைகள் இயங்காது.
- பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும்.
- சிக்பேட், கே.ஆர். மார்க்கெட், காந்தி பஜார் போன்ற முக்கிய சந்தைகள் மற்றும் கடைகள் மூடப்படும்.
- வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் மூடப்படலாம்.
- அரசு அலுவலகங்கள் திறந்திருந்தாலும், போக்குவரத்து சிக்கலால் வருகை குறையலாம்.
இயங்கும் சேவைகள்:
- நம்ம மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் இயங்கும்.
- மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகள் செயல்படும்.
- ரயில் மற்றும் விமான சேவைகள் திட்டமிட்டபடி இயங்கும்.
- பெட்ரோல் பங்க், பால் விற்பனை நிலையங்கள் மற்றும் மளிகை கடைகள் திறந்திருக்கும்.
- Blinkit, Zepto, instamart போன்ற ஆன்லைன் வணிக சேவை நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.