பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ உடன் இணைந்து ஐபிஎல் போட்டிகளை சினிமா தியேட்டர்களில் ஒளிபரப்ப இருக்கிறது.
2025 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து வரும் நாட்கள் பொழுதுபோக்கு நிறைந்தவையாக இருக்கின்றன. இந்த பொழுதுபோக்கு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பிவிஆர் ஐநாக்ஸ் சினிமா தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்க முடியும்.
மார்ச் 22ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிரிக்கெட் ரசிகர்கள் பெரிய திரைகளில் போட்டிகளை கண்டு கொண்டாடலாம். கிரிக்கெட் போட்டிகளை நேரலை செய்வதற்காக பிசிசிஐ உடன் பிவிஆர் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. தியேட்டர்களில் பெரிய திரையில் கிரிக்கெட் போட்டிகளை பார்க்கும்போது ரசிகர்களுக்கு மைதானத்தில் சென்று ரசிப்பதை போன்ற ஒரு உணர்வு ஏற்படும் என சொல்லப்படுகிறது.
சினிமா மற்றும் கிரிக்கெட் என இரண்டையும் ஒருங்கிணைத்து ஐபிஎல் போட்டிகளை தியேட்டர்களில் நேரலையில் ஒளிபரப்பு இருக்கிறோம் என கூறி இருக்கிறார் பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. இந்த அனுபவம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் உற்சாகத்தை தரும் எனக் கூறியிருக்கிறார்.
விளையாட்டுத்துறை சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இந்தியாவில் எப்பொழுதுமே வரவேற்பு உண்டு எனக் கூறியிருக்கும் அவர் கடந்த ஆண்டு சில போட்டிகளை ஒளிபரப்பு செய்த போது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் அதன் அடிப்படையிலேயே இந்த ஆண்டு அனைத்து போட்டிகளையும் தியேட்டர்களில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நாட்டின் அனைத்து முன்னணி நகரங்களிலும் இருக்கும் பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை நேரலையில் பார்க்கலாம், அது தவிர இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் போட்டிகளை காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான அட்டவணைகள் நகரத்து நகரம் மாறுபடும் என்பதால் ரசிகர்கள் பிவிஆர் ஐநாக்ஸ் செயலி அல்லது இணையதளம் வாயிலாக விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
தற்போதைக்கு ஐபிஎல் போட்டிகளை மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே, கோலாப்பூர், அவுரங்காபாத் ஆகிய நகரங்களில் இருக்கும் பிவிஆர் தியேட்டர்களில் காணலாம். அதே போல குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத், ஆனந்த் , ஜாம்நகர், ராஜ்கோட் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் கொல்கத்தா ,வடகிழக்கு மாநிலங்களில் கௌஹாத்தி, மத்திய இந்தியாவில் ஒடிசா, ஜார்கண்ட், இந்தூர், ராய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்பூர் ,உதய்பூர், ஹரியானா மற்றும் பஞ்சாபில் குர்குவான், சண்டிகர், லூதியானா, அமிர்தசரஸ், ஜலந்தர் ஆகிய நகரங்களில் காணலாம்.
தென்னிந்தியாவில் ஐதராபாத் ,பெங்களூர், கொச்சி, விசாகப்பட்டினம், விஜயவாடா, திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் இருக்கும் பிவிஆர் ஐநாக்ஸ் தியேட்டர்களில் ஐபிஎல் போட்டிகளை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சென்னையில் ஐபிஎல் போட்டிகள் ஐநாக்ஸ் அரங்குகளில் ஒளிபரப்பப்படுவது குறித்த தகவல் வெளியாகவில்லை.