ARTICLE AD BOX
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் துறை பயிலும் மாணவ மாணவிகள் 39 பேரும், 3 ஆசிரியர்களும் என மொத்தம் 42 பேர் நாகர்கோவிலில் இருந்து பேருந்தில் புறப்பட்டு கேரளாவிற்கு சென்றனர். பேருந்து இடுக்கி மாவட்டத்தை அடுத்துள்ள மூணாறில் இருந்து வட்டவாடகைக்கு செல்லும் சாலையில் எக்கோ பாயிண்ட் பகுதியில் அதிவேகமாக வந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கனகபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி.கணினி அறிவியல் பிரிவு மாணவி வெனிகா, திங்கள் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி.கணினி அறிவியல் பிரிவு மாணவி ஆதிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மூணாறு மற்றும் அடிமாலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் சுதன் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. மற்றொரு மாணவருக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த 3 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.