ARTICLE AD BOX
கடந்த சில நாள்களுக்கு முன்பு, நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரை மாற்றி அதற்கு பதிலாக ஏற்கனவே மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த கே.எஸ். மூர்த்திக்கு மீண்டும் வாய்ப்பளித்துள்ளது. இந்த நிலையில் நேற்று 23.02.2025 தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியத்தை மாற்றி, பென்னாகரம் சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தர்மசெல்வன் என்பவருக்கு வழங்கியுள்ளது. தர்மசெல்வன் தற்போது மாநில செயற்குழு உறுப்பினரும், மாநில வர்த்தக அணி துணைச் செயலாளருமாக இருந்து வருகிறார்.
திமுக: நாமக்கல் மேற்கு மா.செ மதுரா செந்தில் `திடீர்’ மாற்றம் - பதவி பறிப்போனதன் பின்னணி என்ன?தர்மபுரி மாவட்ட தி.மு.க
தர்மபுரியில் திமுக 2 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு, மேற்கு மாவட்டங்கள். கிழக்கு மாவட்டத்திற்குள் தர்மபுரி, பென்னாகரம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளும், மேற்கு மாவட்டத்திற்குள் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி தொகுதி), பாலக்கோடு ஆகிய 3 சட்டமன்ற தொதிகளும் வருகின்றன.
இதில், ஆரம்பக் காலக்கட்டத்தில் திமுக-வை வளர்த்தெடுப்பதில் தீவிரமாக இருந்தவர் அப்போதைய கிழக்கு மா.செ-வான பி.என். பெரியண்ணன், மற்றொருவர் அமமுக-வில் இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர விசுவாசியான மேற்கு மா.செயலாளர் பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன்.
இதில், பெரியண்ணன், தற்போதைய மா.செ வாக அறிவிக்கப்பட்டுள்ள தர்ம செல்வன் ஆகியோர் பா.ம.க-வில் இருந்து வந்தவர்கள். 2001 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, பென்னாகரம் தொகுதியில் பெரியண்ணனுக்கு வாய்ப்புக்கொடுக்காமல் ஜி.கே.மணிக்கு வாய்ப்பு வழங்கியது. அப்போது அதே தேர்தலில் பெரியண்ணன் சுயேட்சையாக நின்று 4 இடம் வந்தார். அதன்பின் தான் திமுக -வில் இணைந்தார்.
2010 ஆம் ஆண்டு பெரியண்ணன் இறந்தபோது, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் பெரியண்ணனுக்கு பதில், திமுக சார்பில் பெரியண்ணனின் மகன் இன்பசேகரன் நிறுத்தப்பட்டார். அப்போது, பாமக சார்பில் எதிர்த்து போட்டியிட்டவர் ஜி.கே. மணியின் மகன் தமிழ்க்குமரன். இத்தேர்தலில் இன்பசேகரன் 36,400 ஓட்டு வித்யாசத்தில் தமிழ்குமரனை தோற்கடித்தார்.

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக-வுக்கு பெரும் சறுக்கல் ஏற்பட்டது. அப்போது இன்பசேகரன், அதிமுக கூட்டணியில் நின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நஞ்சப்பனிடம் 11,600 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாமக சார்பில் நின்ற அன்புமணியை 18,500 ஓட்டுகள் வித்யாசத்தில் தோற்கடித்தார் இன்பசேகரன். 3 இடத்தில் தான் அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமி இருந்தார்.
மா.செ பதவி காலியானதன் காரணம்?
பெரியண்ணனுக்கு பின்னர் தடங்கம் சுப்பிரமணியை கிழக்கு மாவட்ட மா.செவாக அமர்த்தியது கட்சி தலைமை. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மா.செக்களான, கிழக்கு மாவட்ட தடங்கம் சுப்பிரமணியம், மேற்கு மாவட்ட இன்பசேகரன் ஆகிய இருவரும் தன்னுடன் போட்டியிட்ட பாமக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்தனர். இதனால் தலைமை முதலில் இன்பசேகரனின் மேற்கு மாவட்ட மா.செ பதவியை பிடுங்கி அமமுக-வில் இருந்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி அன்பழகனிடம் கொடுத்தது.
இந்த நிலையில் தான் திமுக ஆட்சி வந்தபிறகு தற்போதைய தர்மபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்திடம் கட்சி நிர்வாகிகள் `தடங்கம் சுப்பிரமணியன் யாரையும் மதிப்பதில்லை. அவர் தனியாக அரசியல் செய்கிறார்’ என்று புகார் அளித்துள்ளனர்.
இந்த தகவல் ஒருபக்கம் இருக்க, கடந்த சில மாதங்களுக்கு முன் போட்ட மாவட்ட பொறுப்புகளில் மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அதில், மாவட்ட மாணவரணியில் பா.ம.கவில் இருந்துவந்த மற்றொரு பெரியண்ணன், நல்லம்பள்ளி ஒன்றிய கழக செயலாளர் கே.பி மல்லமுத்து ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கி உள்ளார். அதே நேரத்தில் தர்மபுரி ஒன்றிய கழக செயலாளராக இருந்த கே.எஸ்.ஆர் சேட்டு பதவி பறிக்கப்பட்டதும் இவருடைய மா.செ மாற்றத்திற்கான காரணம் என்கின்றனர்.

யார் இந்த தர்ம செல்வன்?
ஆரம்பக்காலக்கட்டங்களில் பாமக-வில் இருந்து வெளியே வந்து பெரியண்ணன் மூலம் திமுக-விற்குள் வந்தவர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இருந்த அவர், 2011 ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். அப்போது மும்முனை போட்டியாக அதிமுக-வில் சோமசுந்தரம், பாமக பழனிசாமி ஆகியோரிடம் 3560 ஓட்டுகளில் தோல்வியடைந்தார். பின்னர் மாவட்ட பொருளாளர், மாநில செயற்குழு உறுப்பினர், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் போன்ற பதவிகள் வகித்துவந்தார். 2014 ஆம் ஆண்டு உட்கட்சி தேர்தலில் ஏரியூர் ஒன்றியச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட தர்மசெல்வன் செல்வராஜ் என்பவரிடம் சொற்ப ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தார். இந்த நிலையில் தான் தற்போது இவருக்கு கிழக்கு மாவட்ட மா.செ பதவி வழங்கப்பட்டுள்ளது” என்கின்றனர் திமுக உடன்பிறப்புக்கள்.
திமுக: நாமக்கல் மேற்கு மா.செ மதுரா செந்தில் `திடீர்’ மாற்றம் - பதவி பறிப்போனதன் பின்னணி என்ன?Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
